கோவையில், ஆதார் மையங்கள் முடங்கியது ஏன்? அதிகாரி விளக்கம்

0
81

பொதுமக்களிடம் ஆதார் எடுக்க முன்பு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் கடந்த 1½ ஆண்டுகளாக பொதுமக்கள் ஆதார் எடுப்பதற்கும் அதில் திருத்தங்கள் செய்வதற்கும் தனியாருக்கு அனுமதி அளிக்கவில்லை. கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் மட்டும் தற்போது ஆதார் மையங்கள் செயல்படுகின்றன.

ஆதார் மையங்களில் பணியாற்றுபவர்கள் அனைவரும் அதற்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள். அவர்களால் தான் ஆதார் எடுப்பதற்கும், ஆதாரில் திருத்தங்கள் செய்யவும் முடியும்.

அவர்களுக்கு தனித் தனி அடையாள எண் (ஐ.டி.) கொடுக்கப்படும். ஆதார் இணையதளத்திற்குள் செல்வதற்கு ஐ.டி. எண் உள்ளவர்கள் தங்கள் யூசர் ஐ,.டி. மற்றும் பாஸ்வேர்டு, அவர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் ஆதாரில் திருத்தங்கள் செய்ய முடியும்.

மேலும் ஆதார் மையங்களில் பணியாற்றுபவர்கள் பொது மக்கள் கொடுக்கும் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேசிய தனித் துணை ஆணையத்துக்கு அனுப்புவார்கள். அந்த ஆவணங்களை தேசிய தனித்துவ ஆணையம் சரி பார்த்து ஆதார் வழங்கும். ஆவணங்கள் சரியாக இல்லாத பட்சத்தில் அது நிராகரிக்கப்படும்.

அப்படி நிராகரிக்கப்படும் பட்சத்தில் அந்த ஆவணங்கள் எந்த ‘யூசர் ஐ.டி. பாஸ்வேர்டு’ அதாவது எந்த ஆதார் மையத்தில் பணியாற்றியவர் அனுப்பினார் என்பதும் உடனடியாக தெரிந்து விடும். இந்த செயல்கள் அனைத்தையும் கணினியே தன்னிச்சையாக செய்து விடும். ஆதாரில் திருத்தங்கள் செய்யும் போது ஆன்லைனில் தவறான ஆவணங்கள் மற்றும் சரியாக ஸ்கேன் செய்யாமல் அனுப்பும் ஆதார் மைய பணியாளர்களின் ஐ.டி. எண் தன்னிச்சையாக செயல் இழந்து விடும். அதன்பின்னர் அவர்கள் ஆதாரில் திருத்தங்கள் செய்ய முடியாது.

இதுகுறித்து ஆதார் மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவையில் உள்ள சில ஆதார் மையங்கள் முடங்கி விட்டன. இதற்கு காரணம் அங்கு பணியாற்றும் சில பணியாளர்களின் ஐ.டி. செயல் இழந்து விட்டது. அதாவது அவர்களால் புதிதாக ஆதார் எடுக்கவோ, ஆதாரில் திருத்தங்கள் செய்யவோ முடியாது. இதனால் இத்தனை நாட்கள் அங்கு சென்று கொண்டிருந்த பொதுமக்கள் தற்போது கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் மணி கணக்கில் காத்திருக்கின்றனர்.

அங்கு தினமும் 30 பேருக்கு தான் டோக்கன் கொடுக்கப்படுகிறது. ஆனால் தற்போது 100-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் 2 கவுண்ட்டர்கள் தான் உள்ளன. அது போதுமானதாக இல்லை. இதனால் தான் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் மற்றும் மத்திய மண்டல அலுவலகங்களில் கூட்டம் குறைவாக உள்ளது. எனவே பொதுமக்களில் சிலர் அங்கு சென்று ஆதார் எடுக்கலாம்.

ஆதார் மையங்களில் பணியாற்றுபவர்கள் பொதுமக்கள் கொடுக்கும் ஆவணங்களை சரியாக ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு வெளியூரில் இருந்து இடம் மாறி வரும் ஒருவர் உள்ளூரில் ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்ய ஏ கிரேடு கெஜட் அதிகாரியிடம் சான்றிதழ் வாங்கி வர வேண்டும். அந்த அதிகாரி ஏ கிரேடு கெஜட் தகுதிக்கு குறைவாக இருந்தால் அந்த சான்றிதழை கணினியே நிராகரித்து விடும்.

இவ்வாறு தொடர்ந்து நிராகரிக்கப்படும் ஆவணங்களின் விகிதாசாரம் 55 சதவீதத்தை எட்டும்போது அந்த பணியாளரின் அடையாள எண் (ஐ.டி.) தானாகவே செயல் இழந்து விடும்.

அதுபோலத் தான் கோவையில் உள்ள சில ஆதார் மையங்களில் பணியாற்றுபவர்களின் அடையாள எண்கள் செயல் இழந்து உள்ளது. இந்த குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.