பல லட்சம் கோடி முதலீடு திரட்ட அமெரிக்க அதிபர் சவுதியில் முகாம்

0
2

அமெரிக்க அதிபர் டிரம்ப் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் திரட்டும் நோக்கத்துடன் சவுதி அரேபியா சென்று, அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து நேற்று பேச்சு நடத்தினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கு ஆசிய நாடுகளுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக நேற்று சவுதிக்கு சென்றார்.

டிரம்புடன் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் உட்பட ஏராளமான தொழிலதிபர்கள் சென்றுள்ளனர்.

ரியாத் விமான நிலையம் வந்திறங்கிய டிரம்பை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேரில் சென்று வரவேற்றார். மாலையில் அமெரிக்கா – சவுதி முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது.

சவுதி அரேபியா அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவில், 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஏற்கனவே உறுதியளித்து இருந்தது.

அதை 85 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த அமெரிக்கா தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது.

பதிலுக்கு அமெரிக்க நிறுவனங்கள் சவுதியின் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தமான ‘விஷன் 2030’ திட்டத்தில் உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் ‘நியோம்’ எனப்படும் எதிர்கால பிரமாண்ட நகரம் போன்ற மெகா திட்டங்களில் முதலீடு செய்ய முன்வந்தன.

இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.

சவுதி அரேபிய இளவரசர் உடனான பேச்சின் போது, கச்சா எண்ணெய் விலையை கட்டுப்பாட்டில் வைக்க, உற்பத்தியை தொடர்ந்து அதிகரிக்கும் படி வலியுறுத்தினார்.

இன்று சவுதியின் ரியாத்தில் நடக்கும் வளைகுடா ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டில், ஈரானின் அணுசக்தி திட்டம், காசா போர் மற்றும் சவுதி – இஸ்ரேல் உறவு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

 

டிரம்பிற்கு கத்தார் அரசு பரிசு

கத்தார் மன்னர் குடும்பம், அதிபர் டிரம்புக்கு 3,400 கோடி ரூபாய் மதிப்பிலான ‘போயிங் 747 —- 8’ என்ற ஆடம்பர விமானத்தை பரிசாக வழங்க முன் வந்துள்ளது.இதற்கு, அமெரிக்க எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த சிலரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் அளித்த பதிலில், ”இந்த மாதிரியான பரிசை நான் ஒருபோதும் நிராகரிக்க மாட்டேன். இதை மறுப்பதற்கு நான் முட்டாள் இல்லை. தற்காலிக ‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானமாக இது செயல்படும். என் பதவிக்காலத்துக்கு பின் அதிபர் அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக வழங்குவேன்,” என்றார்.