ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் – 3 பெண்கள் உள்பட 17 பேர் கைது

0
96

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர், வண்டிப்பாதையில் உள்ள வீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அங்குள்ள வீட்டு கதவுகளில் இறுதி அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில் இங்குள்ள வீடுகளை காலி செய்து உரிய ஒத்துழைப்பு அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதியில் இருந்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. அப்போது சில வீடுகள் இடிக்கப்பட்டன. கடந்த ஜூன் 5-ந் தேதி ஜீவா நகரில் டோக்கன் பெற்று காலி செய்யப்பட்ட 143 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. இதையடுத்து ஜூன் மாதம் 17-ந் தேதி மீதமுள்ள 120 வீடுகளுக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி நகர் அமைப்பு அலுவலர் விமலா, குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் விஜயகுமார், மின்வாரிய துறை உதவி பொறியாளர் சந்திரபிரபா ஆகியோர் ஜீவா நகரில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட 120 வீடுகளை இடிக்க வந்தனர்.

இதை அறிந்த ஜீவா நகர் மக்கள் ஒன்று சேர்ந்து வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீஸ் உதவி கமிஷனர்கள் எழில் அரசு, வெங்கடேஷ், சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த பொதுமக்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடு பட்ட 3 பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்து விட்டு 5-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் 70 வீடுகளை இடித்து தள்ளினர். மீதமுள்ள 50 வீடுகள் 3 நாட்களில் இடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் சென்ற பிறகு இடிக்கப்பட்ட வீடுகளில் ஏதேனும் முக்கியமான பொருட்கள் கிடக்கிறதா என்று அங்கு குடியிருந்தவர்கள் தேடி பார்த்தனர்.