குழந்தை இறப்பு குறைவாக உள்ள மாவட்டங்களின் பட்டியலில் கோவை முதலிடமும், மகப்பேறு நிதியுதவியில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.
மாநில அளவிலான பொது சுகாதார அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில், 2024-25ம் ஆண்டில் குழந்தைகள் இறப்பு விகிதம், மகப்பேறு இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துதல், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டம் வழங்குதல் ஆகியவற்றில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டங்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குழந்தை இறப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில், கோவை முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை இறப்பு விகிதமானது, 1,000 குழந்தைகளுக்கு, 3.9 குழந்தைகள் என மிகக் குறைந்த அளவில் உள்ளது.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு, டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டம் வழங்குவதில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களில், கோவை மூன்றாவது இடம் பிடித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட தொகையில், 95.5 சதவீதம் தொகை கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு அனுமதிக்கப்பட்ட தொகையில், 99.9 சதவீதம் அதாவது, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.8 கோடியே, 12 லட்சத்து, 89 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
விழாவில், கோவை மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி, முன்னாள் சுகாதார அலுவலர் அருணா, மாநகராட்சி நகர்நல அலுவலர் மோகன் ஆகியோர், விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் பெற்றனர்.