பேச்சுவார்த்தை நடத்துங்கள்; இந்தியா, பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகள் அமைப்பு வலியுறுத்தல்

0
2

இருதரப்பு தாக்குதலை நிறுத்திவிட்டு, உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த நாட்டின் 3 ராணுவ தளங்களை குறி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இந்திய நிலைகள் மீது நடத்தப்படும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை இந்திய ராணுவம் துல்லியமாக முறியடித்து வருகிறது.

அதேவேளையில், ஜம்மு காஷ்மீர், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவமும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த சூழலில், இருதரப்பு தாக்குதலை நிறுத்திவிட்டு, உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, ஜி7 நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உயர் பிரதிநிதிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்.,22ம் தேதி நடத்தப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இருநாடுகளின் மோதல் காரணமாக பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச தாக்குதலை நிறுத்த வேண்டும்.

இருநாடுகளில் உள்ள மக்களின் பாதுகாப்பில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம் உடனடியாக தாக்குதலை நிறுத்தி விட்டு, இருநாடுகளும் அமைதி திரும்புவதற்காக நேரடி பேச்சுவர்த்தை நடத்த வேண்டும். நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம். தூதரக ரீதியாக தீர்வு காண தயாராக இருக்கிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.