லாட்டரி மோசடி வழக்கு: மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.119½ கோடி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை

0
98

கோவை துடியலூரை சேர்ந்தவர் லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் கேரளாவில் வெளிமாநிலங்களை சேர்ந்த லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் உரிமையை பெற்று இருந்தார். சிக்கிம் மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த போது, விதிமுறைகளைமீறி கோடிக்கணக்கில் கேரளாவில் முறைகேடு செய்ததாக இவர் மீதுசி.பி.ஐ. விசாரணை நடத்தியது. கொச்சியில் உள்ள சி.பி.ஐ. போலீசில் மார்ட்டின் மீது மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

கடந்த 1.4.2009 முதல் 31.8.2010-ம் ஆண்டு வரை சிக்கிம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து பரிசு விழுந்த சீட்டுகள் மூலம் மொத்தம் ரூ.910 கோடியே 30 லட்சம் மதிப்புக்கு முறைகேடுகள் நடைபெற்று இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தின் மூலம் கம்பெனிகள் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்ததும் தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் மார்ட்டின் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தவழக்கு தொடர்பாகமத்திய அமலாக்கத்துறை இயக்குனரகம் தற்போது மார்ட்டின் நிறுவன சொத்துக்களை முடக்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள மார்ட்டினுக்கு சொந்தமான 61 கட்டிடங்கள், 82 வீட்டுமனைகள், குடியிருப்பு கட்டிடத்துடன்கூடிய 6 வீட்டுமனைகள் உள்பட மொத்தம் ரூ.119 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.138 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் வருமானவரித்துறையும் கோவையில் உள்ள மார்ட்டின் அலுவலகத்தில் சோதனைநடத்தி கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்தது. வருமானவரித்துறையும் மார்ட்டின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.