உயர்கல்வி சேர்க்கைக்காக நடத்தப்படும், ஜே.இ. இ., நுழைவுத்தேர்வை பொறுத்தவரை, 75 கேள்விகளுக்கு, 180 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. ஆனால், ‘நீட்’ தேர்வுக்கு 180 கேள்விகளுக்கு, 180 நிமிடங்கள் வழங்கப்படுவதும்; அதிலும் கேள்விகள் மிக கடினமான முறையில் அமைவதும் முரணாக உள்ளதாக, கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தேசிய அளவில் உயர்கல்வி சேர்க்கைக்கு, 80க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், ஜே.இ.இ., நீட், நாட்டா, சி.யு.இ.டி., போன்ற தேர்வுகள் பிரபலமானவை. ஜே.இ.இ., பொறியியல் சேர்கைக்காகவும், நீட் மருத்துவ படிப்புக்காகவும் நடத்தப்படுகிறது.
நீட் தேர்வில், இயற்பியல் பிரிவில் கேட்கப்பட்ட, 45 கேள்விகளில், 25 கேள்விகள் மிக கடினமாக இருந்துள்ளன. இதன் காரணமாக, நடப்பாண்டில் கட்- ஆப் மதிப்பெண் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
கல்வியாளர் அஸ்வின் கூறியதாவது:
ஜே.இ.இ., மெயின் தேர்வில் கேட்கப்பட்ட இயற்பியல் கேள்விகளை காட்டிலும் கடினமாக, நீட் தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இயற்பியல் பிரிவில், 45 கேள்விகள் கேட்கபட்டதில், 18 கேள்விகள் மிக கடினமாக இருந்தன.
ஜே.இ.இ., தேர்வுகளில், 75 கேள்விகளுக்கு 180 நிமிடங்கள் வழங்கப்படும் சூழலில், அதை காட்டிலும் கடினமாக உள்ள நீட் தேர்வில், 180 கேள்விகளுக்கு 180 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.
ஒரு கேள்விக்கு கேள்வியை படித்து, பதில் எழுத ஒரு நிமிடம் வழங்குகின்றனர். இச்சூழலில், கேள்விகளின் தன்மை அதற்கேற்ப இருக்க வேண்டும்.
இயற்பியல் பிரிவில், கேட்கப்பட்ட 45 கேள்விகளில், 25 கடினமானவை. அதில், 18 கேள்விகள் யாராலும் பதில் எழுத முடியாத அளவில் இருந்தது. இதுகுறித்து, பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.
நடப்பாண்டில், நான்கு பாடப் பிரிவுகளிலும் சேர்த்து 124 மதிப்பெண் நன்றாக படிப்பவர்கள் கூட பதிலளிக்க முடியாத வகையில் இருந்தது.
இதன் படி, அரசு மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைக்க, ஓ.சி., பிரிவில் 535-555 மதிப்பெண்களும், பி.சி., பிரிவினர் 500-525 மதிப்பெண்களும், பி.சி.எம்., 490-515 மதிப்பெண்களும், எம்.பி.சி., 480-510 மதிப்பெண்களும், எஸ்.சி., 416-440 மதிப்பெண்களும், எஸ்.சி.ஏ., பிரிவினர் 343-370 மதிப்பெண்களும், எஸ்.டி., 330-380 மதிப்பெண்களாகவும் இருக்கும். ஒட்டுமொத்தமாக, 95 முதல் 120 மதிப்பெண்கள் வரை கட்-ஆப் குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.