கோவை மாவட்டம் துடியலூர் அருகில் உள்ள வெள்ளக்கிணறு பழனியப்பா அவென்யூவில் வசித்து வருபவர் சதீஷ்குமார் (வயது 59). இவர் கோவையில் சொந்தமாக ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தீபிகா. இவர்களுக்கு சரண்யா, சுபிக்சா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சதீஷ்குமார் தனது மனைவி மற்றும் மகள்களுடன் கேரள மாநிலத்தில் உள்ள மலம்பழா அணைக்கு சுற்றுலா சென்றார். பின்னர் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் ஒரு பக்க ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் பீரோவில் இருந்த பொருட்களை சரிபார்த்தபோது, பீரோவில் இருந்த செயின், வளையல், மோதிரம், ஒட்டியாணம் என மொத்தம் 167 பவுன் நகை, ரூ.1½ லட்சம் மற்றும் வீட்டில் இருந்த வெள்ளி நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து அவர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய், கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சதீஷ்குமார் வீட்டை பூட்டி சுற்றுலாவிற்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், ஜன்னல் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து பீரோவின் சாவியை எடுத்து பீரோவை திறந்து நகை, மற்றும் பணத்தை துணிகரமாக கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க, உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ நடந்த தினத்தில் அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக யாரும் வலம் வந்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்டுடியோ உரிமையாளர் வீட்டில் 167 பவுன் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துடியலூரில் 167 பவுன் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ஸ்டூடியோ உரிமையாளரான சதீஷ்குமார் சுமார் ரூ.1½ கோடியில் வீடு கட்டியுள்ளார். ஆனால் வீட்டின் முன்பு கண்காணிப்பு கேமரா வைக்கவில்லை. மேலும் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா கடந்த 3 மாதங்களாக செயல்படவில்லை என்று கூறுகின்றனர்.
அதிக பணம் செலவழித்து வீடு கட்டுபவர்கள் ஆனால் வீட்டின் முன்பு கண்காணிப்பு கேமரா வைப்பதில்லை. மேலும் கண்காணிப்பு கேமரா வைத்தாலும் அதனை பராமரிப்பதில்லை. இதனால் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணுவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் வீட்டின் முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்த முன்வரவேண்டும். அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் போது அருகில் உள்ளவர்களிடமோ, அந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்திலோ தகவல் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும் என்று கூறினர்.