ரேஸ்கோர்ஸ் நடைபாதை யார் வீட்டு சொத்து?; ஆளாளுக்கு ஆக்கிரமிப்பு நகரமைப்புத்துறை ‘குறட்டை’

0
3

மாநகரின் முக்கிய வி.ஐ.பி.,கள் மிகுந்த, ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்படும் வணிக கட்டடங்கள், ‘பார்க்கிங்’ வசதி இல்லாமல், ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்து வருகின்றன. சாதாரண டீக்கடை நடத்துவோர் கூட, தங்கள் கடையின் மூன்று மடங்கு இடத்தை ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்தில், 2019ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளின்படி, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று வணிக கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டும். கட்டட நிறைவு சான்று இருந்தால்தான், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறமுடியும்.

வரைபடங்களில் ‘பார்க்கிங்’ வசதிகளை காண்பித்து, அனுமதிபெறும் வணிக கட்டடங்கள் பல, அவ்வாறு வசதிகளை ஏற்படுத்துவதில்லை. மாறாக, கட்டடத்துக்கு வெளியே ரோட்டோரம், நடைபாதை உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்து, வாகனங்களை நிறுத்துகின்றனர்.

இதனால், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், இஷ்டத்துக்கு ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்கின்றனர். இதனால், பாதசாரிகள் நடைபாதைக்கு பதிலாக, ரோட்டில் நடந்து சென்று விபத்துக்கு ஆளாகும் கொடுமை நடக்கிறது.

காலை, மாலை நேரங்களில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தினமும், 100க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி செய்கின்றனர். இப்படியிருக்க, கட்டடத்தின் வெளியே கயிறு கட்டியும், இரும்பு சங்கிலி கொண்டு தடுப்பு ஏற்படுத்தியும் ஆக்கிரமிக்கின்றனர்.

தங்களது சொந்த வாகனங்களையும், வாடிக்கையாளர் வாகனங்களையும் மட்டுமே நிறுத்த அனுமதிக்கும், வணிக கட்டட உரிமையாளர்கள், மீறி நிறுத்துவோரை செக்யூரிட்டிகள் கொண்டு பகிரங்கமாக மிரட்டுகின்றனர். இதற்கு பயந்து, பார்க்கிங் வசதி தேடி வாகன ஓட்டிகள் அலைவதையும் காணமுடிகிறது.

ரேஸ்கோர்ஸ், 108 விநாயகர் கோவில் எதிரேயும், பல வணிக கட்டடங்கள் இப்படி விதிமீறலில் ஈடுபட்டுள்ளதை, கண்கூடாக காணமுடிகிறது. வி.ஐ.பி.,கள் மிகுந்த இப்பகுதியில், அரசியல் பின்புலம் கொண்டவர்கள், மாநகராட்சி அதிகாரிகள், போலீசாரையும் மிரட்டும் அவலம் காணப்படுகிறது.

இதனால் நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் பின்வாங்குகின்றனர். ‘பார்க்கிங்’கே இல்லாமல் நிறைய வணிக கட்டடங்கள் இயங்கிவரும் நிலையில், ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்பது மாநகராட்சியின் பொறுப்பு.

மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் குமாரிடம் கேட்டபோது,”ரேஸ்கோர்ஸ் பகுதியில் விதிமீறல் வணிக கட்டடங்களில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.