பொள்ளாச்சி அருகே உள்ள நாகூர் பகுதியை சேர்ந்தவர் முகமது இலியாஸ் (வயது 46). இவர் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் முகமது இலியாஸ் தனது நகைக்கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வடக்கிபாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அவர்கள் முகமது இலியாஸ் நடத்தி வரும் நகைக்கடை அருகே வந்தபோது அந்த கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அத்துடன் அந்த கடையின் முன்பு இருந்த 2 கண்காணிப்பு கேமராக்களும் உடைக்கப் பட்டு இருந்தன. இதனால் அந்த கடைக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து திருடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்தியதுடன், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர்.
அப்போது வடக்கிபாளையம் பிரிவு அருகே ஒரு ஸ்கூட்டரில் 3 பேர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, அதில் இருந்த ஒருவர் கீழே இறங்கி தப்பி ஓடினார். இதையடுத்து அதில் இருந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் சேலம் மாவட்டம் பெரியபுத்தூரை சேர்ந்த மாதேஷ் (57), சிவராஜ் (50) என்பதும், தப்பி ஓடியது சிவராஜின் மகன் ராமசாமி (27) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் 3 பேரும் சேர்ந்து முகமது இலியாஸ் நகைக்கடையின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி ஆகியவற்றை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அத்துடன் தப்பி ஓடிய ராமசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
அந்த நகைக்கடைக்குள் 3 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மட்டுமே வெளியே இருந்தது. மற்ற நகைகள் அனைத்தும் லாக்கரில் வைத்து பூட்டப் பட்டு இருந்தது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பியது. மேலும் இந்த சம்பவம் குறித்து வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.