மாநகரில் ஈஸ்டர் கொண்டாட்டம் சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை

0
5

ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு கோவையில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலம் கடைபிடித்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுகின்றனர்.

இந்தாண்டு தவக்காலம் மார்ச் 5ம் தேதி, ‘சாம்பல் புதன்’ துவங்கி, இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு, புனித வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு, உயிர்த்தெழுந்த நிகழ்வை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, மாநகரில் உள்ள கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

தொடர்ந்து இயேசு உயரித்தெழுந்ததை கொண்டாடும் வகையில், சனிக்கிழமை நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

மாநகரில், புனித மிக்கேல் அதிதுாதர் ஆலயம், புலியகுளம் புனித அந்தோணியார் தேவாலயம், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், கோவைபுதுார் குழந்தை இயேசு ஆலயம், போத்தனுார் புனித சூசையப்பர் ஆலயம், கார்மெல் நகர் கார்மெல் அன்னை ஆலயம், கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்கள், சி.எஸ்.ஐ., கிறிஸ்து நாதர் ஆலயம், இம்மானுவேல், ஹோலி டிரினிட்டி உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில், நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது.

டவுன்ஹாலில் உள்ள, புனித மிக்கேல் அதிதுாதர் ஆலயத்தில் நள்ளிரவு, கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.