வாழைக்காய் விலை உயர்வு இல்லை; விவசாயிகள் ஏமாற்றம்

0
4

வாழைத்தார் மையத்தில், கடந்த வாரத்தை விட, இந்த வாரம் விலை உயர்வு ஏதும் இல்லாமல், அதே விலைக்கு ஏலம் போனதால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏலம் மையம் உள்ளது. 3000க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இந்த ஏலத்தில், 25 வியாபாரிகள் பங்கேற்றனர். கடந்த வாரத்தில் ஏலம் போன, அதே விலைக்கு இந்த வாரமும், ஏலம் போனதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து வாழைத்தார் ஏல மைய நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, சின்னராஜ் கூறியதாவது:

மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக பலத்த காற்று வீசி வருகிறது. காற்றுக்கு பயந்து, 10,15 நாட்கள் கழித்து அறுவடை செய்ய வேண்டிய வாழைத்தார்களை, விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை சற்று உயர்வாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதே விலைக்கு வாழை காய்கள் ஏலம் போனது.

ஒரு கிலோ நேந்திரன் வாழைக்காய் குறைந்த பட்சம், 25க்கும், அதிகபட்சம், 45 ரூபாய்க்கும், கதலி ஒரு கிலோ குறைந்தபட்சம், 25, அதிகபட்சம், 50 ரூபாய்க்கு ஏலம் போனது. பூவன் ஒரு வாழைத்தார் குறைந்த பட்சம், 100, அதிகபட்சம், 600 ரூபாய்க்கும், செவ்வாழை குறைந்த பட்சம், 150, அதிகபட்சமாக, 850, தேன் வாழை அதிகபட்சம், 750, ரஸ்தாலி, 750, மொந்தன் குறைந்தபட்சம், 20, அதிகபட்சம், 100 ரூபாய்க்கு ஏலம் போனது. வெயில் காலத்தில் பஜ்ஜி விற்பனை சூடு பிடிக்காததால், மொந்தன் வாழைக்காய் மிகவும் குறைவான விலைக்கு ஏலம் போனது. இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.