வாகனங்கள் சோதனை வனத்துறையினர் நடவடிக்கை

0
4

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, ஆழியாறு சோதனைச் சாவடியில், வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறை சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்குள்ள நீர்தேக்கங்கள், அணைகள், கோவில்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் வனவிலங்குகளைக் காண அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகை புரிகின்றனர்.

தற்போது, கோடை துவங்கியுள்ளதால், வழக்கத்துக்கு மாறாக சுற்றுலாப் பயணியரின் வருகை அதிகரித்துள்ளது. வழக்கமாக, ஆழியாறு சோதனைச் சாவடி வழியாக, 350க்கும் மேற்பட்ட வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலாப் பயணியர் வந்தனர்.

இதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பிளாஸ்டிக், மதுபாட்டில்கள், போதை வஸ்துகள் கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படும் என, எச்சரித்தனர்.

வனத்துறையினர் கூறியதாவது:

கோடை விடுமுறை துவக்கம் காரணமாக, சுற்றுலாப் பயணியரின் வருகை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாகனமும் முறையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள், மதுபாட்டில்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டால், பறிமுதல் செய்யப்படும். அதேபோல, வனப்பகுதி வழியே செல்வதால், பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது.

மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி உணவு உட்கொள்வது, காலி உணவு பொட்டலங்களை திறந்த வெளியில் வீசி செல்வது, குரங்கு, வரையாடுகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.