மருந்துகளை விற்பனை செய்து ரூ.68 லட்சம் மோசடி ஊழியர் கைது

0
102

கோவை ஆர்.எஸ்.புரம் ராமச்சந்திரா ரோட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 56). இவர் மொத்த மருந்து விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தவர் ராமச்சந்திரன் (45). 10-ம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள இவர் ரத்தினபுரியில் வசித்து வந்தார். மருந்து விற்பனை நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததால் இவரை நம்பி சில பொறுப்புகளை கொடுத்து இருந்தனர்.

வெளியூர்களில் உள்ள மருந்து கடைகளுக்கு தேவையான ஆர்டர்களை எடுத்து மருந்துகளை அனுப்பி பணம் வசூலித்து வந்தார். இந்த நிலையில் 7 மருந்துக்கடைகள் மருந்து வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தன. ஆனால் அந்த நிறுவனங்கள் மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், மருந்துகளை வாங்க விரும்புவதாகவும் உரிமையாளரிடம் ராமச்சந்திரன் கூறினார். இதனை நம்பி மருந்து விற்பனை நிறுவனமும் 7 நிறுவனங்களின் பெயர்களில் மருந்துகளை அனுப்பி வைத்தது.
இந்த மருந்துகள் அந்த நிறுவனங்களுக்கு போய்ச்சேரும் முன்பு, ராமச்சந்திரன் சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு சென்று பெற்று அதனை திருச்சியை சேர்ந்த ஒருவர் மூலம் விற்று மோசடி செய்தது தெரியவந்தது. மொத்தம் ரூ.68 லட்சத்து 86 ஆயிரத்து 832 மோசடி நடைபெற்று இருப்பதாக மருந்து விற்பனை நிறுவன உரிமையாளர் ரவிச்சந்திரன் கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் கமி‌‌ஷனர் சுமித்சரண், துணை கமி‌‌ஷனர் பெருமாள் ஆகியோரின் உத்தரவின்பேரில் உதவி கமி‌‌ஷனர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் மேற்பார்வையில் இந்த மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி,ஊழியர் ராமச்சந்திரனை கைது செய்தனர். அவர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.