பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், நேற்று நடந்த சமூக அறிவியல் தேர்வுடன் நிறைவடைந்தது.
தேர்வறையை விட்டு வெளியேறிய மாணவ, மாணவியர், உற்சாகத்தில் ஒருவர்மேல் ஒருவர் பேனா மை தெளித்தும், முகங்களில் எழுதிக் கொண்டும், காகிதங்களை பறக்கவிட்டும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 518 பள்ளிகளை சேர்ந்த, 40,061 மாணவர்கள், 158 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர்.
தேர்வு நேற்று முடிவுற்ற நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி, வரும் 21ம் தேதி தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
‘மொழிப்பாடங்கள், கணிதம், சமூக அறிவியல் தேர்வுகள் எளிதாக இருந்ததாகவும், அறிவியல் பாடத்தில் சில 5 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும்’ மாணவர்கள் சிலர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம், 2023ல் 93.49 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் மாநிலத்தில் 13வது இடத்தையும், 2024ல் 94.01 சதவீத தேர்ச்சி விகிதத்துடன், 12வது இடத்தையும் பிடித்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்கும் என்கிறார், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் அருளானந்தம்.
அவர் கூறுகையில், ”மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள கோவை மாவட்டம், கடந்த சில ஆண்டுகளாக மாநில அளவில் முதல் 10 இடங்களுக்கு வரவில்லை. மாணவர் எண்ணிக்கையில் குறைவாக உள்ள மாவட்டங்களே, தேர்ச்சி விகிதத்தில் முதன்மை பெற்றுள்ளன. ஆனால், இந்த ஆண்டு தேர்வுகள் எளிதாக இருந்ததால், தேர்ச்சி விகிதம் உயரும் என்று எதிர்பார்க்கலாம்,” என்றார்.