பொள்ளாச்சி அருகே அட்டக்கட்டியில், நீலகிரி வரையாடுகள் குறித்து கணக்கெடுப்புக்கான வனப்பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
தமிழகத்தில், மாநில விலங்காக நீலகிரி வரையாடு உள்ளது. பொள்ளாச்சி – வால்பாறை ரோடு, கிராஸ்ஹில்ஸ் உள்ளிட்ட வனப்பகுதிகளில் இதன் நடமாட்டத்தை காண முடிகிறது.
இந்நிலையில், தமிழக அரசு, 25 கோடி ரூபாயில், நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டம் கடந்தாண்டு துவங்கியது. ஐந்தாண்டு திட்டமாக உள்ள இக்குழு வாயிலாக பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது.
கடந்தாண்டு முதல் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, 1,031 வரையாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் ஆண்டு கணக்கெடுப்பு பணிகள் வரும், 24ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடக்கின்றன. இதற்கான பயிற்சி முகாம், அட்டக்கட்டியில் நேற்று நடந்தது.
நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர் கணேஷ்ராம் பயிற்சி அளித்தார். விஞ்ஞானி சுப்பையா மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர். வனப்பணியாளர்களுக்கு பயிற்சி மேற்கொள்வது குறித்து அறிவரைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கணக்கெடுப்பு மேற்கொள்வது குறித்த விண்ணப்படிவம், கையேடுகள், டீசர்ட் போன்றவை வழங்கப்பட்டன.
நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர் கூறியதாவது:
தமிழகம் – கேரளா மாநிலம் இணைந்து இரண்டாம் ஆண்டு ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள், 24ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கின்றன.
தமிழகத்தில் உள்ள, 14 கோட்டங்களில், 176 இடங்களில் இந்த கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி கோட்டத்தில் – 32, திருப்பூர் – 22, கோவை – 5 என மொத்தம், 59 இடங்களில் கணக்கெடுப்பு நடக்கிறது.
பொள்ளாச்சி கோட்டத்தில் பணி மேற்கொள்ளும், 100 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
ஒவ்வொரு குழுவிலும், இரண்டு பேர் நியமித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். அதில், கிராஸ்ஹில்ஸ் பகுதியில் மட்டும் இரண்டு குழுக்கள் அனுப்பப்படும். ஒரு குழு சென்ற பின், அரை மணி நேரத்துக்கு கழித்து மற்றொரு குழு ஆய்வு செய்யும். அவர்கள் மாலையில் சந்தித்து வரையாடுகளை பார்த்தது, குறிப்பெடுத்த விபரங்களை ஆய்வு செய்து சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில், எல்லையோர கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
கணக்கெடுப்பின் போது, ஆண், பெண் வரையாடுகள், குட்டிகள் எண்ணிக்கை கண்டறிய வேண்டும். அவற்றுக்கு ஏதாவது கட்டி, நோய் தாக்குதல் உள்ளதா என்பதை குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். ஜி.பி.எஸ்., உதவியுடன், பைனாகுலோர் கொண்டும் ஆய்வு செய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.