2 கிலோ தங்க நகை கொள்ளை : 8 பேர் கும்பலுக்கு 5 ஆண்டு சிறை

0
8

கோவை : கோவை,ஆர்.எஸ்.புரம், சீனிவாசராகவன் வீதியை சேர்ந்தவர் பாலாஜி. தங்க நகை பட்டறை நடத்தி வந்த இவர், மொத்த ஆர்டர் எடுத்து நகை தயாரித்து, வெளியூருக்கு அனுப்பி வந்தார்.

ஆர்டர் எடுத்த நகை, 2 கிலோ 150 கிராம் எடையுள்ள தங்க நகைகளை, விஜயாவாடாவில் உள்ள நகைக் கடையில் கொடுத்து வருமாறு, அவரது பட்டறை ஊழியர்கள் ஜெயக்குமார், தாமோதரன் ஆகியோரை அனுப்பினார்.

2003, பிப்., 2ம் தேதி இரவு இருவரும், பாலாஜி வீட்டிலிருந்து சூட்கேசில் நகையை வைத்து மொபட்டில் புறப்பட்டனர். குட்ெஷட் ரோட்டில் வந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த கும்பல் இவர்களை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, சூட்கேசுடன் நகையை பறித்து தப்பியது.

கோவை பெரிய கடைவீதி நகை பட்டறை தொழிலாளி வெங்கடேசன்,55, ரவிசங்கர்,52, மோகன்ராஜ்,55, பத்மநாபன்,52, பெங்களூருவை சேர்ந்த ஜாவித்,47,மதுரை, எம்.கே.புரத்தை சேர்ந்த பட்டி முருகன்,42, ஸ்ரீ ராம்,46, தென்காசி, கடையநல்லுரை சேர்ந்த உஸ்மான் முகைதீன்,49, கணபதி, காந்தி நகரை சேர்ந்த விஸ்வநாதன்,53, பெரிய கடை வீதி கணேசன்,53, இவரது சகோதரர் எம்.முருகன்,48, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நகை மீட்கப்பட்டது.

இவர்கள் மீது, கோவை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 22 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.

விசாரித்த நீதிபதி கலைவாணி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் வெங்கடேசன், ரவிசங்கர், மோகன்ராஜ், பத்மநாபன், பட்டிமுருகன் உஸ்மான் முகைதீன், விஸ்வநாதன், முருகன் ஆகியோருக்கு தலா ஐந்தாண்டு சிறை, தலா,2,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதிட்டார்.