பெரிய வெங்காயம் ஏற்றுமதியால் … சின்ன வெங்காயம் விற்பனை சூடு பிடிக்கும்!

0
9

நாடு முழுவதும் பெரிய வெங்காயத்தின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் பெரிய வெங்காயத்தின் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு நீக்கி உள்ளது.

பெரிய வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரி நீக்கத்தால், வெங்காயத்தின் ஏற்றுமதி அதிகரிக்கும். இதனால் பெரிய வெங்காயம் விலை அதிகரிக்கலாம். அச்சமயத்தில் சின்ன வெங்காயத்தின் விற்பனை சூடு பிடிக்கும், விலையும் திருப்திகரமாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் துணை தலைவர் பெரியசாமி கூறியதாவது:-

மகாராஷ்டிராவில் தான் அதிக அளவில் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. வடமாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் தான் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.33 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய அரசின் ஏற்றுமதி வரி நீக்கத்தால் பெரிய வெங்காயத்தின் ஏற்றுமதி அதிகரிக்கும். இதனால், நாள் அடைவில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்கும். அதனால், சின்ன வெங்காயத்தின் பயன்பாடு அதிகரித்து விற்பனை சூடு பிடிக்கும்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிர் செய்யப்படுகிறது. இதில் தொண்டாமுத்துாரில் தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் பின் மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரம்பலுார், துறையூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அதிகம் உற்பத்தி உள்ளது.

கடந்த 7 மாதங்களாக சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை குறைவான விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது.

உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தற்போது மத்திய அரசின் நடவடிக்கையால் சின்ன வெங்காயத்தின் விலை உயரும். மத்திய அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு அளிக்கிறோம்.

அதே சமயம் சாமானிய மக்கள் பாதிக்காதவாறு பெரிய மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை கட்டுக்குள் இருக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.-