உத்தரபிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்காகாந்தியை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதற்கு நாடு முழுவதும் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்றுக்காலை நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என்.கந்தசாமி, வீனஸ் மணி, கே.எஸ்.மகேஷ்குமார், கணபதி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சவுந்தரகுமார், பச்சை முத்து, திருமூர்த்தி, கோவை போஸ், வடவள்ளி காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உத்தரபிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் பிரியங்காவை தடுத்து நிறுத்திய உத்தரபிரதேச அரசு பதவி விலக வேண்டும் என்று கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேசினார்கள்.
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எம்.பி.சக்திவேல் தலைமை தாங்கினார். சர்க்கிள் தலைவர் முகமது இஸ்மாயில் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மதுசூதனன், கு.பெ.துரை, ஆர்.கோபாலகிருஷ்ணன், நந்தகுமார், கண்ணன், இருகூர் சுப்பிரமணியம், முருகநாதன் உள்பட பலர் காங்கிரஸ் கொடியுடன் கலந்து கொண்டனர். சிறிது நேர ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல கோவை புறநகர் வடக்கு மாவட்டம் மற்றும் சூலூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணா சீரணி கலையரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கினார். மாநில எஸ்.சி., எஸ்.டி. தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ஆர். சின்னையன், மாவட்ட பொருளாளர் கங்கா கணேஷமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.பி.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மோடி மற்றும் உத்தரபிரதேச அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் பிரியங்கா காந்தியை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். இதில் முன்னாள் மேயர் வெங்கடாசலம் அழகு ஜெயபால், விஜயகுமார், சரவணகுமார், அபிராம் சின்னசாமி, வி.எம்.சி. சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.