கோவை: ‘தினமலர்’ நாளிதழ், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும், உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, கோவையில் இன்று துவங்குகிறது. வரும், 28 வரை நடக்கிறது.
பிளஸ் 2 முடித்த பின், தங்கள் பிள்ளைகளை என்ன படிக்க வைப்பது, எங்கே படிக்க வைப்பது என்பதுதான், பெற்றோரின் குழப்பமாக உள்ளது. கல்வியாளர்களின் துணையுடன், இவர்களுக்கு துல்லியமாக வழிகாட்டுகிறது, ‘தினமலர்’ நாளிதழ்.
ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்களுடன் இணைந்து தினமலர் இன்று நடத்தும் ‘வழிகாட்டி’ நிகழ்ச்சியில், பெற்றோரின் அத்தனை குழப்பங்களுக்கும் தீர்வு காத்திருக்கிறது.
கோவை கொடிசியா அரங்கில், கோலாகலமாக நடக்கும் நிகழ்ச்சியில், புத்தம் புது படிப்புகள், அரசு வேலைவாய்ப்புகள், மருத்துவம், இன்ஜி., தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டட் ரியாலிட்டி, சோசியல் மீடியா, டிஜிட்டல் மார்க்கெட்டிங், ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளில், விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் நேரடிஆலோசனைகள் வழங்கவுள்ளனர். படிக்கும் போதே வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். முன்னணி பல்கலைகள், உட்பட, 130க்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள், இடம்பெற
உள்ளன.
கல்வியாளர்கள் யார், யார்?
நிகழ்ச்சியில், ‘எதிர்காலத்தில் ஆளப்போகும் தொழில்நுட்பங்கள்’ எனும் தலைப்பில், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, ‘தேசிய நுழைவுத் தேர்வுகள் மற்றும் உதவித் தொகைகள்’ குறித்து கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், ‘நீட், ஜே.இ.இ., தேர்வுகளில் சாதிக்க டிப்ஸ்’ எனும் தலைப்பில் கல்வி ஆலோசகர் அஸ்வின், ’21ம் நுாற்றாண்டு திறன்கள்’ குறித்து நாஸ்காம் தேசிய தலைவர் உதயகுமார், ‘உடனடி வேலை வழங்கும் படிப்புகள்’ குறித்து ரமேஷ் பிரபா, ‘டிரோன் டெக்னாலஜி’ குறித்து சென்னை எம்.ஐ.டி., பேராசிரியர் செந்தில்குமார், ‘தொழில்துறை வல்லுனர் ‘ எனும் தலைப்பில், இ.வி.,லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் மேலாண்மையின் செந்தில்ராஜா, ‘கல்விக்கடன் எளிது’ எனும் தலைப்பில், வங்கியாளர் விருத்தாசலம் ஆகியோர் பேச உள்ளனர்.
இணையும் நிறுவனங்கள்
கருத்தரங்கை, ‘தினமலர்’நாளிதழுடன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது. பக்கபலமாக ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா பல்கலை பங்கேற்கின்றன.
அசோசியேட் ஸ்பான்சராக ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங், தொழில்நுட்பக் கல்லுாரிகள் உள்ளன.
ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி, கே.எம்.சி.எச்., அண்ட் டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள், கற்பகம் கல்வி நிறுவனங்கள், கோவை எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், ரத்தினம் குழும கல்வி நிறுவனங்கள், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, கோவை சி.எம்.எஸ்., கல்வி நிறுவனங்கள், திருப்பூர் கே.எம்.சி., சட்டக்கல்லுாரி, ராஜலட்சுமி தொழில்நுட்பக்கல்லுாரி, இந்திய பட்டயக்கணக்காளர்கள் இன்ஸ்ட்டிடியூட் இணைந்து வழங்குகிறது.
வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க, அனுமதி இலவசம். கருத்தரங்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கு பரிசாக லேப்டாப், டேப், வாட்ச் காத்திருக்கின்றன.
என்ன மாணவர்களே…ரெடியா!
நிகழ்ச்சியில் ‘இஸ்ரோ’ விஞ்ஞானி
வழிகாட்டி நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக, ‘வான் அறிவியல்’ எனும் தலைப்பில், ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ஐ.எஸ்.ஆர்.ஓ.,) சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குனர் ராஜராஜன் பேச உள்ளார்.இவருடன், ‘நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்’ எனும் தலைப்பில், இந்திய பாதுகாப்பு துறை ராணுவ விஞ்ஞானி டாக்டர் டில்லிபாபு பேசுகிறார்.