வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி ரூ.6 கோடி சுருட்டல் தம்பதி மீது புகார்

0
90
கோவை கணபதி பகுதியில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தை பிரின்ஸ் டேனியல் மற்றும் அவருடைய மனைவி கரிஷ்மா ஆகியோர் நடத்தி வந்தனர்.
மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாக கூறியதை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் ஏராளமான பட்டதாரிகள் வேலைக்கு விண்ணப்பித்தனர்.
ஒவ்வொருவரிடமும் தலா ரூ.2 லட்சம்வரை பணத்தை வாங்கிக்கொண்டு வேலை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் பிரின்ஸ் டேனியலிடம் கேட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை கிடைக்க முன் பணமாக செலுத்திவிட்டதாகவும், பணத்தை திரும்ப தர முடியாது என்றும் கூறியுள்ளார். தனக்கு அரசியல் பலம் இருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு அளித்தனர். இது குறித்து பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:-
பிரின்ஸ் டேனியல் இதுபோன்று ஊட்டியில் வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். அதுவும் தற்போது மூடப்பட்டுள்ளது. அவருடைய மனைவி கரிஷ்மா தலைமறைவாக உள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மொத்தம் 300 பேர்களிடம் ரூ.6 கோடிவரை மோசடி நடைபெற்றுள்ளது. மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வேலைக்கு அனுப்பியதாக கூறி சிலரை சுற்றுலா விசாவில் அனுப்பி உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் வேலை கிடைக்காமலும், நாடு திரும்ப முடியாமலும் சிரமப்படுகிறார்கள். இதுபோன்ற மோசடி ஆசாமிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த மோசடி குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.