கோவையில் தொடரும் அவலம் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

0
105

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 4 வயது குழந்தை உள்ளது. தம்பதி அந்த பகுதியில் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களுடைய வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் விஷப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அச்சமடைந்த தம்பதியினர் மகளை அழைத்துக்கொண்டு அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தனர். அங்கிருந்தவாறு அவர்கள் வேலைக்கு சென்று வந்தனர்.

சம்பவத்தன்று வழக்கம் போல கணவன்-மனைவி 2 பேரும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர். அப்போது வீட்டில் இருந்த சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதி முழுவதும் தேடினர். அப்போது செல்வராஜ்(வயது 54) என்ற தொழிலாளியின் வீட்டில் சந்தேகப்பட்டு தேடியபோது, அவர் தனது வீட்டு படுக்கையறையில் சிறுமியின் வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொண்டு இருந்தார்.
இதை பார்த்து ஆத்திரமடைந்த உறவினர்கள் அந்த நபரை பிடித்து இழுத்து சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியிடம் தகாத முறையில் ஈடுபட்ட அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து துடியலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதன்பின்னர் இந்த வழக்கு துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மேலும் சமூகநலத்துறை அதிகாரிகளும் நேரில் வந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் துடியலூர் பகுதியில் தொடர்ந்து பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். துடியலூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.