ரோட்டில் சுற்றித்திரிந்த 6 மாடுகள் சிறைபிடிப்பு

0
5

கோவை; கோவை – மருதமலை ரோட்டில் பாரதியார் பல்கலை பகுதியில் ரோட்டில் சுற்றித்திரிந்த ஆறு மாடுகளை, மாநகராட்சி அலுவலர்கள் நேற்று பிடித்து, வ.உ.சி., உயிரியல் பூங்காவில் பராமரித்து வருகின்றனர்.

கோவை மாநகராட்சி பகுதியில் மாடு வளர்ப்போர், பகல் நேரங்களில் ரோட்டில் விட்டு விடுகின்றனர். அங்கும் இங்குமாக சுற்றித் திரிவதால் போக்குவரத்து பிரச்னை ஏற்படுகிறது; வாகன ஓட்டிகள் விபத்தைச் சந்திக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன், உக்கடம் புல்லுக்காடு மைதானம் பகுதியில் சுற்றித் திரிந்த மாடுகள் மோதியதில், குழந்தையும், ஒரு பெண்ணும் காயமடைந்தனர்.

மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் சென்று, அப்பகுதியில் ரோட்டில் சுற்றித் திரிந்த இரண்டு மாடுகளை பிடித்தனர். இதேபோல், மருதமலை ரோட்டில் மாடுகள் இருப்பதாக தகவல் கிடைத்தது.

வ.உ.சி., உயிரியல் பூங்கா இயக்குனர் சரவணன் தலைமையிலான குழுவினர் சென்று, பாரதியார் பல்கலை பகுதியில் சுற்றித்திரிந்த ஆறு மாடுகளை பிடித்து, பூங்காவுக்கு கொண்டு வந்தனர்.

இதுவரை, 15 மாடுகள் சிறைபிடிக்கப்பட்டு, பூங்காவில் பராமரிக்கப்படுகின்றன. உரிமையாளர்கள் இன்னும் உரிமை கோரி வரவில்லை.

அவ்வாறு வரும்பட்சத்தில், அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்