10 ஆண்டுகளில் 15 லட்சம் மரக்கன்றுகள்; பசுமையாகும் கோவை , திருப்பூர்

0
5

அன்னுார்; ‘கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 10 ஆண்டுகளில், 15 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன’ என, உதவி வன பாதுகாவலர் தெரிவித்தார்

கோவை வனவியல் விரிவாக்க கோட்டம் சார்பில், காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் மரம் வளர்ப்புக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி அன்னுாரில் நேற்று நடந்தது.

உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் பேசுகையில், ”ஒரு மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பரப்பு இருக்க வேண்டும். எனவே தமிழகத்தில் உள்ள 23.69 சதவீத வனப்பரப்பை 33 சதவீதம் ஆக்க ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன், 10 ஆண்டுகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 1,970 பயனாளிகளின் நிலங்களில், 15 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது இரண்டாம் திட்டத்தில், கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் மரக்கன்றுகள் நட பணி நடந்து வருகிறது,” என்றார்.

வன ஆர்வலர் ராம் மோகன் பேசுகையில், ”சவுக்கு, தேக்கு, மலை வேம்பு ஆகியவற்றை நடவு செய்து, சில ஆண்டுகளில் நல்ல வருமானம் பெறலாம். பூமி வெப்பமயமாதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாம் அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பான பூமியை விட்டுச் செல்ல வேண்டும்,” என்றார்.

வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் பேசுகையில், ”வனத்துறை சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன,” என்றார்.

பேரூராட்சித் தலைவர் பரமேஸ்வரன் பேசுகையில், ”மண்ணும் மரமும் அமைப்புடன் இணைந்து அல்லி குளம் குளத்தில் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டுள்ளன. அன்னூர் குளத்தில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன,” என்றார்.