2026க்குள் கள் இறக்க அனுமதிக்காவிட்டால் தி.மு.க.,வால் ஆட்சியில் அமர முடியாது கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை

0
5

கோவை: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், கள் இறக்க அனுமதி கோரி, பனை, தென்னை பாதுகாப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் நடந்தது.

தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசியதாவது:

கலப்படத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறித்தான், தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்கவில்லை. கேரளம், புதுச்சேரி, ஆந்திர மாநில அரசுகள் கள் இறக்க அனுமதித்து, அவற்றை முறைப்படுத்தியிருக்கும்போது, தமிழக அரசு ஆளுமை இல்லாத அரசாக இருக்கிறதா.

1987 ஜூலை 1ம் தேதி கள் இறக்க அனுமதிக்க முடியாது என எடுத்த முடிவு, கொள்கை முடிவல்ல; கொள்ளை முடிவு. அரசின் கையாலாகாத்தனத்தால், கள் இறக்க அனுமதிக்கவில்லை.

2026 சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், கள் இறக்க அனுமதிப்பது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க., ஆட்சியில் அமர முடியாது. அ.தி.மு.க.,வின் இ.பி.எஸ்., கள் விவகாரத்தைக் கையில் எடுத்தால், அவர் ஆட்சியைக் கைப்பற்றக் கூடும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி பேசுகையில், “வரும் சட்டசபை தேர்தலில் கள் விவகாரம், மிக முக்கியப் பங்காற்றும்,” என்றார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, விவசாயிகள் ‘கள்’ அருந்தி, தடைக்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கிஷோர், செயலாளர் ரங்கசாமி உட்பட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.