பள்ளியை மூட எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர், மாணவர்கள் சாலை மறியல்

0
5

கோவை; கோவை உப்பிலிபாளையம் ஒய்.டபிள்யூ.சி.ஏ., பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அவிநாடு ரோடு அருகே ஒய்.டபிள்யூ.சி.ஏ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 1967ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது இப்பள்ளியில் எல்.கே.ஜி., முதல் பிளஸ்2 வரை, 173 மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளியை மூடுவதாக தகவல் வெளியானது. இதை எதிர்த்து மாணவர்கள், பெற்றோர் நேற்று ஹுசூர் ரோட்டை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்த நிலையில், வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. ரேஸ்கோர்ஸ் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டனர். மாணவர்கள், பெற்றோர் கூறுகையில், ‘கடந்த, 15ம் தேதி பள்ளியில் நடந்த கூட்டத்தில், திடீரென பள்ளியை மூடுவதாக நிர்வாகம் அறிவித்தது.

அருகே இருக்கும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகத்தினர் கூறுகின்றனர். 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களை, வேறு பள்ளியில் எப்படி சேர்ப்பார்கள். எனவே, பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும்’ என்றனர்.

ஒய்.டபிள்யூ.சி.ஏ., பொதுச்செயலாளர் ரேணுகா பீட்டர்ஸிடம் கேட்டபோது, ”கொரோனா காலத்துக்கு பிறகு மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து தற்போது, 173 பேர் மட்டுமே உள்ளனர். 23 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். நிதிப்பிரச்னையால் பள்ளி தொடர்ந்து செயல்பட முடியாத சூழல் உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களை, அருகே உள்ள பள்ளிகளில் சேர்க்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்றார்.