கோவை; நேரம், காலம் இன்றி பிறருக்காக ஓடிக்கொண்டிருக்கும், மகளிர் கால்களுக்கு சற்று ஓய்வளிக்கும் விதமாகவும், அடுப்படி பொறுப்பு, கடமைகளை மறந்து மகிழ்ந்திருக்கவும், திறன்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காகவும், ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் லட்சுமி செராமிக்ஸ் சார்பில், ‘மகளிர் மட்டும்’ எனும் நிகழ்ச்சி, நேற்று கோவையில் நடத்தப்பட்டது.
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், நடந்த இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, லட்சுமி செராமிக்ஸ் இணை இயக்குனர் கற்பகம், இந்துஸ்தான் கல்விக்குழுமங்களின் தலைவர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா, பி.ஆர்.ஜே., ஆர்த்தோ சென்டர் ஒருங்கிணைப்பாளர் லலிதா ஆகியோர், குத்துவிளக்கேற்றி நிகழ்வுகளை துவக்கி வைத்தனர்.
வயதை மறந்து உற்சாகம்
நிகழ்ச்சியின் இடையே, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வயதை மறந்து அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. திரைப்பட பாடகர் மதிச்சி பாலா மற்றும் குழுவினரின் இசை நிகழ்வு, அரங்கத்தையே அதிரவைத்தது.
வயது வேறுபாடின்றி மகளிர் ஆடி, பாடி விசிலடித்து கொண்டாடினர். தங்களின் முக பாவங்களை ஆர்வமாக வரைந்தும், மெஹந்தி போட்டும் மகிழ்ந்தனர்.
ஆரோக்கிய கலந்துரையாடல் நிகழ்வில், ஏராளமான மகளிர் தங்கள் ஆரோக்கியம் சார்ந்த சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பி, டாக்டர்களிடம் பதிலை பெற்றனர்.
கரம் கோர்த்தவர்கள்
உற்சாகமாக கொண்டாடப்பட்ட ‘மகளிர் மட்டும்’ நிகழ்வில், முக்கிய பங்களிப்பாளராக இந்துஸ்தான் கல்விநிறுவனங்கள், இணை ஸ்பான்சர்களாக திருப்பூர் வால்ரஸ் நிறுவனம், பி.எஸ்.ஆர்., சில்க்ஸ், அறிவுசார் பங்குதாரராக பி.ஆர்.ஜே., ஆர்த்தோ சென்டர் கரம் கோர்த்தன.
பரிசுகளை பொன்மணி வெட்கிரைண்டர்ஸ், மெடிமிக்ஸ், ஐயப்பா நெய், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள், யுனிக் கிப்ட்ஸ், சம்பூரணம் ஏஜென்ஸிஸ் வழங்கினர். ‘ஹாஸ்பிட்டாலிட்டி’ பார்ட்னராக, ஓ பை தாம்ரா பங்கேற்றனர்.
துவக்கவிழா நிகழ்வில், லட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குனர் முத்துராமன், வால்ரஸ் நிறுவன இயக்குனர் டேவிட், இன்னர் வீல் கிளப் முன்னாள் தலைவர் கவிதா, வி.ஆர்.ஜெ., மேக் மருத்துவமனை இயக்குனர் பகவத்குமார், டாக்டர் முஜிபூர் ரகுமான், ஓ பை தாமரா பொது மேலாளர் உமாபதி அமிர்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விருது பெற்றவர்கள்!
நிகழ்வின் முக்கிய பகுதியாக, பல்வேறு துறைகளில் சமூக பங்களிப்புக்கு உறுதுணையாக இருந்த மதுரையை சேர்ந்த பார்கவி, புதுக்கோட்டை சேர்ந்த மல்லிகா மற்றும் ஜெயலட்சுமி, திருச்சி வள்ளி, தஞ்சாவூர் கவிதா, திருப்பூர் சவுந்திரம், ஈரோடு சாமியாத்தாள், கோவை சப்ரீனா, சென்னை மீனா சத்தியமூர்த்தி ஆகியோர், மலர்மங்கை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.