கோவை; கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட, 12 மாவட்டங்களில், 2023ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றவர்கள் நிர்வாகம் தொடர்பாக பயிற்சி கலெக்டர்களாக பணிபுரிகின்றனர். அவர்களுக்கு, கோவை மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தும் சிறப்பு திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக விளக்கப்பட்டது.
முதலாவதாக, 50 ஆயிரம் இணைப்புகளுக்கு, 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் விளக்கப்பட்டன. கிக்கானி பள்ளி அருகே ரயில்வே பாதைக்கு கீழ் குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணி, காந்திபுரத்தில் உருவாக்கப்படும் செம்மொழி பூங்கா, உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு, சேரன் நகரில், 400 வீடுகளுக்கு இணைய வழியில் குடிநீர் சப்ளை செய்யும் விதம் குறித்து பொறியியல் பிரிவு அதிகாரிகள் விளக்கினர்.
கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான பில்லுார் அணைக்கு தண்ணீர் தருவிக்கப்படும் அப்பர் பவானி, எமரால்டு, கெத்தை ஆகிய அணைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நீர் வழித்தடங்கள் குறித்து, விளக்கப்பட்டது.பின், பில்லுார் மூன்றாவது திட்ட சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கட்டன்மலையில் குகை அமைத்து குழாய் பதித்திருப்பதை பயிற்சி கலெக்டர்கள் பார்வையிட்டனர்.