கோவை: முத்திரைத்தாள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆன்லைன் முறையில் பணம் செலுத்த அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
வீடு, வீட்டுமனை, நிலம் வாங்குதல், விற்பது, வாடகை, குத்தகை போன்ற வணிக ஒப்பந்தங்கள் என, அனைத்துக்கும் முத்திரைத்தாள் அவசியம். பதிவுத்துறை அலுவலகத்தில் சொத்து கிரயம் முடித்து, பதிவு செய்வதற்கு, 25,000, 20,000, 15,000, 10,000, 5,000 மதிப்புள்ள முத்திரைத்தாள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த, மூன்று மாதங்களாக கோவையில் முத்திரை தாள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் போது ஏற்படும் சிக்கலை தவிர்க்க, ‘இ–ஸ்டாம்பிங்’ முறையில் முத்திரைதாள் கட்டணத்தை செலுத்தும் முறையும் அமலில் உள்ளது. ஆனாலும், மக்கள் அதை குறைவாகவே பயன்படுத்துகின்றனர்.
முத்திரை தாள் தட்டுப்பாடு குறித்து ‘ஸ்டாம்ப் வென்டர்’கள் கூறுகையில், ‘அதிகம் பயன்படுத்தப்படும், 25,000. 20,000, 15,000 மற்றும் 10,000 ரூபாய் மதிப்புள்ள முத்திரை தாள்களை கேட்டு மக்கள் வருகின்றனர். ஆனால், அவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இ- ஸ்டாம்பிங் முறையில் எங்களிடமே பெற்றுக்கொள்ளலாம் ஆனால் அதை மக்கள் விரும்புவதில்லை முத்திரைத்தாள்களையே கேட்கின்றனர்’ என்றனர்.
கோவை மாவட்ட கருவூல அலுவலர் குமரேசன் கூறியதாவது:
முத்திரைத்தாள்களை குறைப்பதற்கான முயற்சியை அரசு மேற்கொண்டுள்ளது. 5,000 ரூபாயுக்கு மேலுள்ள தொகைக்கான முத்திரைத்தாள்களை இ- ஸ்டாம்பிங் முறையில் ஸ்டாம்ப் வென்டாரிடமே கட்டணத்தை செலுத்தலாம். அதற்கான பேப்பரை அவரிடமிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.
இன்னும் சிலர் சில ஆயிரங்களுக்கு மட்டும் முத்திரை தாள் வாங்கி கொண்டு, மீதமுள்ள தொகையை (பிரிவு 41) ‘ஆன்லைனில்’ செலுத்துகின்றனர். இது போன்ற நடைமுறையை மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். அதனால் முத்திரைத்தாள் பயன்பாடு குறைந்துள்ளது.
அவசியத்தேவைக்கு பயன்படுத்தவே 5,000, , 1,000, 500, 100 ரூபாய் முத்திரைத்தாள்கள் புழக்கத்தில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.