விவாகரத்து வழக்கு விசாரணையில் புதிய உத்தரவு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

0
6

கோவை : தம்பதியர் இடையே ஏற்படும் பல்வேறு குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரி குடும்ப நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்கின்றனர். இது போன்ற வழக்கில் குடும்ப நல நீதி மன்றங்கள் பின் பற்ற வேண்டிய புதிய வழி காட்டு நெறி முறைகள் குறித்து, சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் விவரம்:

குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு, வழக்கறிஞரின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட மனுவை குடும்ப நீதிமன்றத்தில் குடும்ப நீதிமன்ற விதி 5(2) படி, நேரடியாகவோ அல்லது மனுதாரர் அனுமதியளிக்கப்பட்ட முகவரால் தாக்கல் செய்யலாம். வழக்கு தாக்கல் செய்யப்பட்ட உடன், எதிர்மனுதாரருக்கு முன்னறிவிப்பு வழங்காமல், நீதிமன்றம் மனுவை பரிசீலனைக்கு எடுத்து கொள்ளலாம்.

குடும்ப நீதிமன்றம் வழக்கை பதிவு செய்து, அதற்கு எண் வழங்கப்பட்டு, வழக்கறிஞர் அல்லது அவரது உதவியாளர், முகவர் வாயிலாக சம்மன் அனுப்ப வேண்டும். வழக்கு விசாரணைக்கு முன், இரு தரப்பினரை கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும். கவுன்சிலிங் முடிந்த பிறகு சமரசத்திற்கு அனுப்ப வேண்டும். ஆனால், இரு தரப்பினரும் நேரடியாக சமரச தீர்வுக்கு சம்மதித்தால், கவுன்சிலிங் செல்ல தேவையில்லை.

குடும்ப நீதிமன்றச் சட்டம் பிரிவு 9-ன் கீழ், இரு தரப்பினர், நேரிலோ அல்லது காணொளி வாயிலாகவோ சமரச தீர்வு விசாரணைக்கு ஆஜராகலாம். காணொளி வாயிலாக பங்கேற்போர், எதிர் தரப்புக்கும், சமரச மையத்திற்கும் முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும். இரு தரப்பினர் இடையே சமரச பேச்சுவார்த்தை வெற்றியடைந்து, தீர்வு காணப்படும் பட்சத்தில், நீதிமன்றம் அந்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தி தீர்ப்பு அளிக்க வேண்டும். சமரசம் தோல்வியடைந்தால், வழக்கு மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு, திருப்பி அனுப்பி வைக்கப்பட வேண்டும். காணொளி வாயிலாக பங்கேற்கும் நபரை வழக்கறிஞர் அல்லது அனுமதிக்கப்பட்ட முகவர் சரியாக அடையாளம் காண வேண்டும்.

குடும்ப நீதிமன்ற வழக்கில் ஆஜராகும், வடவள்ளியை சேர்ந்த வக்கீல் எஸ்.ரவிச்சந்திரன் கூறியதாவது:

குடும்ப வழக்குகளில் புதிய வழிகாட்டிமுறைப்படி, மூன்றாவது நபர் (முகவர்) வாயிலாக வழக்கு தாக்கல் செய்வதால், விவாகரத்திற்காக கட்டாயப்படுத்தல், அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்னைகள் வர வாய்ப்பில்லை.புதிய உத்தரவுப்படி, தம்பதியர் தேவைப்பட்டால் மட்டுமே ஆஜரானால் போதுமானது.

வாய்தா தோறும் கோர்ட்டில் ஆஜராக தேவையில்லை. வழக்கு தாக்கல் செய்த பிறகு, கோர்ட் ஊழியர் வாயிலாக சம்மன் அனுப்பும் நடைமுறை மாற்றப்பட்டு, வக்கீல் அல்லது அவரது உதவியாளர் வாயிலாக அனுப்பும் முறையால் எதிர் தரப்பினருக்கு உடனடியாக சம்மன் கிடைத்துவிடும்.

புதிய முறைப்படி, கவுன்சிலிங் கட்டாயமில்லை என்பது வரவேற்கத்தக்கது. இரு தரப்பினர் சமரச தீர்வு காண விரும்பினால், கவுன்சிலிங் இல்லாமல் உடனடியாக தீர்வு காணலாம். இதனால் வழக்கு விரைவில் முடிவுக்கு வரும். வழக்கு விசாரணையில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படுவதால், நீதிமன்றங்களில் வழக்கு தேக்கம் குறையும்.

வழக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டு, அதன் நகலை பெறுவதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலமை இருந்தது. தற்போது, தீர்ப்பு அளிக்கப்பட்டவுடன் இலவசமாக நகல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனால் மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக இருக்கும். ஆனால், வழக்கறிஞர் வழிகாட்டுதலுடன் தாக்கல் செய்தால், வழக்கு வெற்றிபெற வாய்ப்பு அதிகம்.

இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.