நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி வாலிபர் பலி

0
7

மேட்டுப்பாளையம், மார்ச் 14: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கஸ்தூரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (36). இவர், கோவை – மேட்டுப்பாளையம் ரயில் வழித்தடத்தில் வீரபாண்டி பிரிவு அருகே நேற்று முன்தினம் தண்டவாளத்தை கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் கடக்க முயன்றுள்ளார். அப்போது, அந்த வழியாக கோவை நோக்கி சென்ற நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். நேற்று காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் விரைந்து சென்று ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சுப்பிரமணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.