கோவையில் பரபரப்பு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல் நடித்து நகை வியாபாரியிடம் ரூ.13 லட்சம் பறிப்பு

0
95

கேரள மாநிலம் தலசேரியை சேர்ந்தவர் நவ்சாத் (வயது 39), நகை வியாபாரி. இவர் அடிக்கடி கோவை, சென்னை, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளுக்கு சென்று தங்க நகை வாங்கி வருவது வழக்கம். அப்போது அவர் தனது நண்பரான அபினே‌‌ஷ் (27) என்பவரை அழைத்துச்செல்வார்.

இந்த நிலையில் நவ்சாத் கோவைக்கு வந்து நகை வாங்க முடிவு செய்தார். அதற்காக தனது நண்பர் அபினேசுடன் கோவைக்கு காரில் வந்தார். அப்போது அவர் நகை வாங்க ரூ.13 லட்சத்தையும் கையில் வைத்து இருந்தார்.
அவர்கள் கோவை சிவானந்தா காலனியில் காரை நிறுத்திவிட்டு தாங்கள் கொண்டு வந்த பணப்பையுடன் வெளியே நடந்து சென்றனர்.
சிவானந்தாகாலனி பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது 2 கார்களில் வந்த 5 பேர் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அதில் ஒருவர் போலீஸ் சீருடை அணிந்து இருந்தார். அவர்கள், தாங்கள் 5 பேரும் லஞ்ச ஒழிப்பு போலீசார் என்றும், உங்கள் மீது சந்தேகம் உள்ளதால் விசாரணை நடத்த வேண்டி உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
பின்னர் அவர்கள், நவ்சாத், அபினேசை ஒரு சொகுசு காரில் ஏற்றிச் சென்றனர். செல்லும் வழியில் அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்துவது போல் துருவித்துருவி பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
பின்னர், அவர்கள் நவ்சாத்திடம் ரூ.13 லட்சத்தை பறித்தனர். அந்த பணம் எப்படி கிடைத்தது அதற்கான ஆவணங்கள் எங்கே, முகவரி ஆகியவற்றை கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் ஒப்படைத்துவிட்டு பணத்தை வாங்கி செல்லுங்கள் என்று கூறி உள்ளனர்.
இதையடுத்து அவர்கள், நவ்சாத், அபினேசை சங்கனூர் பாலம் அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு வேகமாக சென்றனர். இதனால் அந்த கும்பல் மீது சந்தேகம் அடைந்த அவர்கள் 2 பேரும் ரத்தினபுரி போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவம் பற்றி கூறினர்.
உடனே போலீசார், லஞ்ச ஒழிப்பு போலீசாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் யாரிடமும் விசாரணை நடத்தி, பணத்தை பறிமுதல் செய்யவில்லை என்று கூறினார்கள். அப்போதுதான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்று கூறி நவ்சாத்திடம் ரூ.13 லட்சத்தை மர்ம ஆசாமிகள் 5 பேரும் பறித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போலீஸ் துணை கமி‌‌ஷனர் பெருமாள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் நவ்சாத், அபினே‌‌ஷ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அபினே‌‌ஷ் முன்னுக்குப் பின் முரணான பதிலை தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தனியாக அழைத்துச்சென்று விசாரித்தனர். இதில், அவர்தான் திட்டம் தீட்டி கொடுத்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. எனவே அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
நவ்சாத் பலமுறை நகை வாங்க அபினேசை அழைத்துச்சென்றாலும் ரூ.10 லட்சத்துக்கும் குறைவாகவே பணத்தை கொண்டு செல்வது வழக்கம். தற்போதுதான் அவர் ரூ.13 லட்சத்துக்கு பணம் வாங்க கோவை வந்தார். எனவே அந்த பணத்தை பறிக்க அபினே‌‌ஷ் திட்டமிட்டார்.
உடனே அவர் கேரளாவை சேர்ந்த தனது நண்பர்கள் 5 பேரிடம் கூறி லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல் நடித்து பணத்தை பறித்துச்செல்ல திட்டம் வகுத்து கொடுத்து உள்ளார்.
அதன்படி அவருடைய நண்பர்க் 5 பேரும் கோவை வந்து ரூ.13 லட்சத்தை பறித்து உள்ளனர். அபினேசிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள 5 பேரையும் வலைவீசி தேடி வருகிறோம். விரைவில் அவர்களை பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.