பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் நீச்சல் பழகலாம் வாங்க! தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

0
8

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் நேற்று மாலை பெய்த மழையால், மேம்பாலத்தில் குளம் போல தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில், பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு பகுதியில் காலை, மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் ஜோதிபுரம் வரை, 1.6 கி.மீ., தூரத்திற்கு, 115 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகியும், மேம்பாலத்தில் பல்வேறு தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக, பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

நேற்று மாலை பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மழை பெய்தது. இதனால், பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள மேம்பால பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்

மேம்பாலத்தில் மழை தண்ணீர் தேங்கி நின்றதால், பலர் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையை பயன்படுத்தினர். இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,’ பாலத்தின் கட்டுமான பணி மிகவும் மோசமாக இருப்பதால், மழைக்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

பெரியநாயக்கன்பாளையம் எல்.எம். டபிள்யூ., பிரிவு அருகே வாகனங்கள் ஏறி, இறங்கும் பகுதி பள்ளமாக இருப்பதால், அப்பகுதியை கடந்து செல்ல, சிறு வாகனங்கள் முதல் பெரிய வாகனங்கள் வரை பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றன.

இது குறித்து, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. மேலும், பாலம் ஒரே சீராக இல்லாமல் ஏற்ற, இறக்கமாக உள்ளது. ஜோதிபுரத்தில் மேம்பால சாலையும், அணுகு சாலையும் இணையும் இடத்தில் அகலம் மிகவும் குறைவாக உள்ளது.

இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அப்பகுதியில் நிலத்தை கையகப்படுத்தி, அணுகு சாலையை விரிவாக்கம் செய்யும் பணியும் இழுபறியாக உள்ளது. இரவு நேரத்தில் வாகனங்கள் தாராளமாக சென்று வர, பாலத்தின் இருபுறமும் விளக்குகள் இல்லை’ என்றனர்.

மழைநீர் தேங்க காரணம் என்ன?

பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் ஈஸ்வரன் கோவில் அருகே அமைக்கப்பட்ட மேம்பாலத்தில் உள்ள சாலையின் ஓரத்தில் மழை நீர் செல்ல பெரிய அளவிலான துளைகள் அமைக்கப்பட்டுள்ளன.மழையின் போது பெருகும் நீர், அத்துளை வழியாக வெளியேறி, அதனுடன் பொருத்தப்பட்ட குழாய் வழியாக சாக்கடைக்கு செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நெடுஞ்சாலை துறையினர் அத்துளையை அடிக்கடி சுத்தம் செய்து பராமரிப்பு செய்யாததால், துளையில் மண், கசடு, தேங்காய் நார்கள், சிறு பாட்டில்கள் ஆகியவை நிறைந்து விடுகின்றன. இதனால் மழை நேரத்தில், துளை அடைத்து, மேம்பாலத்தில் பெருமளவு நீர் தேங்கி, வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் பாலத்தில் உள்ள துளையின் அடைப்பை நீக்கி, தேங்கியுள்ள மழை தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.