முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் இருந்து, 70 ஆண்டு பழமையான பீரங்கி குண்டு கண்டெடுப்பு – சந்தன மரத்தை கடத்த முயன்றவர்களை துரத்தியபோது சிக்கியது

0
103

கோவை ராம்நகரில் சரோஜினி வீதியில் நகைக்கடை அதிபர் வீடு உள்ளது. இந்த வீட்டில் புகுந்த 2 பேர் அங்கிருந்த சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றனர். அதை பார்த்த காவலாளி துரைசாமியை அவர்கள் 2 பேரும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓடினார்கள். அவர்களை போலீசார் துரத்தினார்கள். அதற்குள் மர்ம ஆசாமிகள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் போலீசார் அந்தப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாளவியா வீதியில் பூட்டிக்கிடக்கும் பழைய வீட்டின் வளாகத்தில் சோதனை செய்த னர். அந்த வீட்டின் வளாகத்தில் வித்தியாசமான குண்டு ஒன்று கிடந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த குண்டை எடுத்துக்கொண்டு போலீஸ் நிலையம் சென்றனர்.
பிறகு அது குறித்து விசாரணை செய்தபோது, ஆங்கிலேயர் ஆட்சியின்போது பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டு என்பது தெரியவந்தது. இந்த குண்டு அங்கு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை செய்தனர். அதில் கிடைத்த தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-
கோவை ராம் நகர் மாளவியா வீதியில் உள்ள அந்த வீடு கீர்த்தி ராமசாமி அய்யருக்கு சொந்தமானது. தற்போது இந்த வீட்டில் யாரும் இல்லை, பூட்டியே கிடக்கிறது. அவர் ஆங்கிலேய ஆட்சியின்போது சப்-கலெக்டராக பணியாற்றினார். அவருடைய மருமகன்கள் சுப்பிரமணியம், சி.கே.கோபால் ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றினார்கள். 2-வது உலகப்போரிலும் அவர்கள் பங்கேற்று உள்ளனர். பின்னர் அவர்கள் ஓய்வு பெற்று விட்டனர்.
இதில் சி.கே.கோபாலுக்கு பழைய பொருட்களை சேகரித்து வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போதுதான் அவர் 70 ஆண்டுக்கு முன்பு ராணுவத்தில் பயன்படுத்திய பீரங்கி குண்டை எடுத்து வந்து பராமரித்து உள்ளார். அது 25 செ.மீ. உயரமும், 7½ கிலோ எடையும் கொண்டது.
இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டது என்பதால் வெடிக்க வாய்ப்பு இல்லை. தற்போது அந்த குண்டு ஆயுதப்படையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.