கோவை : கோவை அருகே குருடம்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் வரை, 92.21 கி.மீ., துாரத்துக்கு புதிதாக புறவழிச்சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு, 926 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை, அத்துறை மேற்கொண்டு வருகிறது.
திட்டத்தால், குருடம்பாளையம், கோவில்பாளையம், பசூர், ஆம்போதி, கணேசபுரம், கரியாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், விளைநிலங்கள் பாதிக்கப்படும். இது விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
கோவையில் உள்ள நிலம் எடுப்பு பிரிவு அலுவலகத்தை, விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர். அவர்களிடம், டி.ஆர்.ஓ., ஷர்மிளா பேச்சு நடத்தினார். அப்போது, 15 கேள்விகள் அடங்கிய ஆட்சேபனை கடிதத்தை விவசாயிகள் ஒவ்வொருவரும் வழங்கினர்.
நெடுஞ்சாலைத் துறையினருடன் நேரில் வந்து, விளைநிலங்கள் பாதிக்கப்படும் பகுதிகளை பார்வையிடுவதாக டி.ஆர்.ஓ., உறுதியளித்தார்.
கொங்கு மண்டல விவசாயிகள் நலச்சங்க தலைவர் முருகசாமி கூறுகையில், ”ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தை அழித்து ரோடு போட வேண்டுமா? எங்கள் நிலங்களை எடுத்து ரோடு போட முயற்சித்தால், அதே நிலத்தில் விழுந்து செத்துப்போவோமே தவிர, ௧ அடி நிலம் கூட தரமாட்டோம்,” என்றார்.