கோவை: விவசாய பயன்பாட்டுக்கான மும்முனை, மின் இணைப்பு வழித்தடத்தை தனியாக ஏற்படுத்த வேண்டும். அப்போது தடங்கல் இல்லா மின்சாரம் விவசாயிகளுக்கு கிடைக்கும்; விளைச்சலும் பல மடங்கு பெருகும் என்று, விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் விவசாயத்துக்கு, மின் வாரியம் இலவசமாக மின்சாரத்தை வழங்குகிறது. தமிழகம் முழுக்க, 23.55 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. கோவை மாவட்டத்தில் மட்டும், 95,987 மின் இணைப்புகள் உள்ளன.
கோவை மாவட்டத்தில் கிராமங்கள், வீடுகள், விவசாயம், தொழிற்சாலை, சிறு, குறு நடுத்தர தொழில்கள், அங்காடிக் கடை, வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும், ஒரே மின் வழித்தடத்தில், மின் வினியோகம் செய்யப்படுகிறது.
விவசாயிகள் சிலர் கூறியதாவது:
அன்றாடம் விவசாயப்பணிகளுக்கு, 14 மணி நேரம் மும்முனை இணைப்பும் மீதமுள்ள, 10 மணி நேரம் இருமுனை இணைப்பு மின்சாரமும்; மற்ற மின் இணைப்புகளுக்கு, 24 மணி நேரமும் மின் வினியோகம் செய்யப்படுகிறது.
கோவையிலுள்ள பல கிராமங்களில், பல மணி நேரம் இரு முனை மின் வினியோகம் செய்வதால், அவ்வழித்தடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், தொழிற் கூடங்களுக்கு குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டு, உள்ள மின் சாதனங்கள், இயந்திரங்கள் பழுதாகின்றன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், விவசாயத்துக்கு செல்லும் மும்முனை மின்சாரத்திலும், குடியிருப்பு அலுவலகம் உள்ளிட்ட பயன்பாட்டிற்கான மின்சாரத்திலும் சரி ஏற்றத்தாழ்வுகள் இன்றி, ஒரே மாதிரி மின்வினியோகம் செய்ய வேண்டும்.
இச்சூழலில் விவசாயிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து, 24 மணி நேரமும் கிடைக்க வேண்டும். தற்போது வழங்கப்படும், 14 மணி நேரத்துக்கான மின்சாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மீதமுள்ள, 10 மணி நேரத்துக்கு இருமுனை மின்சாரம் மட்டும் கிடைக்கிறது
அதை மும்முனையாக வினியோகிக்க வேண்டும். மத்திய அரசின் மறுசீரமைப்பு மின் வினியோக திட்டத்தின் கீழ், தமிழகத்தில் விவசாயத்துக்கு, தனி வழித்தடத்தில் மின் வினியோக பணி துவங்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், விவசாயத்திற்கு தனி வழித்தடம் அமைக்கும் பணிகள், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக துவக்கப்பட்டுள்ளன. இதனால், மின்னழுத்த பிரச்னை ஏற்படாது. மின் இழப்பு குறையும். பகலில் கிடைக்கும் சூரியசக்தி மின்சாரம், விவசாயத்துக்கு வழங்கப்பட உள்ளதாக, மின் வாரிய அதிகாரிகள் கூறினர்.
இது குறித்து, கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் குப்புராணி கூறியதாவது:
விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை, தமிழக அரசின் கொள்கை முடிவு; அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் நடைமுறைக்கு வரும். இதற்கான பூர்வாங்கப்பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது விவசாயப்பகுதிகளுக்கிடையே இருக்கும், குடியிருப்புகளுக்கு ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் மின்சாரத்தை வினியோகிப்பதற்கான நடவடிக்கையை, மின்வாரிய பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
‘மும்முனை மின்சாரம் அவசியம்’
விவசாயிகள் சிலர் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் தற்போது 14 மணி நேரத்திற்கு மட்டுமே மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது மீதமுள்ள 10 மணி நேரம் இருமுனை மின்சாரத்தை பயன்படுத்த’கன்வெர்ட்டர்’ பயன்படுத்துகிறோம்.அப்போது மின்இழுவைத்திறன் குறைவாக இருக்கும். அதனால் எங்களுக்கு மும்முனை மின்சாரம் அவசியமாகி விட்டது. விரைவாக வழங்கும் முயற்சியை, மின்வாரிய அதிகாரிகள் எடுக்க வேண்டும். விவசாய மின் வழித்தடங்களுக்கு தனி வழி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.