பெ.நா.பாளையம்: தடாகம் வட்டாரத்தில் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை தடுப்பணைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சேமிக்கவும், பழைய தடுப்பணைகளை தூர்வாரவும், புதிய தடுப்பணைகளை கட்டவும், தடாகம் வட்டார விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் வடமேற்கு பகுதியில் தடாகம் மற்றும் அதைச் சுற்றி வீரபாண்டி, வீரபாண்டி புதூர், சோமையனூர், உச்சயனூர், காளையனூர், சின்னதடாகம், பெரியதடாகம், ராமநாதபுரம், மடத்தூர், வரப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், தாளியூர், பன்னிமடை, கணுவாய் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சுற்றி மூன்று பக்கமும், இயற்கையின் கொடையான மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. மழைக்காலத்தில் பெய்யும் மழை நீர் வெள்ளமென பெருகி, தடாகம் வட்டாரத்தில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை நிறைக்கிறது. ஆனால், பெரும்பாலான தடுப்பணைகள் தூர்வாரப்படாததால், மழைநீர் தடுப்பணைகளில் தேங்காமல் வீணாகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இது குறித்து, தடாகம் வட்டார விவசாயிகள் கூறியதாவது:
தடாகம் வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி விவசாயமான சோளம், அவரை, துவரை ஆகியவை பயிரிடப்படுகின்றன. ஆழ்குழாய் கிணறு பாசனம் வாயிலாக வாழை, தென்னை, பாக்கு மற்றும் காய்கறிகள் விவசாயம் செய்தும், கால்நடைகளை வளர்த்தும் வருகின்றோம். இப்பகுதியில் விவசாயத்துக்கு உகந்த செம்மண் இருப்பதால், ஒரு காலத்தில் மிகுந்த செழிப்புடன் தடாகம் வட்டாரம் விளங்கியது. நிலக்கடலை, பூசணிக்காய் பெருமளவு விளைவித்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டன.
ஆனால், காலப்போக்கில் கிராமங்களில் உள்ள நீர் வழி பாதைகள், மழை நீர் குட்டைகள், நீர் வழி பாதைகளில் உள்ள தடுப்பணைகள் தூர் வாராமலும், ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.
இதனால் மழைக்காலங்களில் மழை நீர் இவைகளுக்கு செல்லாமல் வீணானது.
கடந்த காலங்களில் இப்பகுதி கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம், 100 முதல், 200 அடி வரை இருந்தது. தற்போது, 500 முதல், 1000 அடி வரை சென்று விட்டது. இதனால் விவசாயிகள் வேளாண் தொழிலை செய்ய முடியாமல், தங்கள் வாழ்வாதாரம் பாதித்து நிலை குலைந்து போய் உள்ளனர்.
தடாகம் பகுதியில் உள்ள மழைநீர் தேங்கும் குட்டைகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் மழைநீர் சேமிப்பு தடுப்பணைகள் எல்லாவற்றையும் தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, பராமரிப்பு செய்ய வேண்டும்.
மழை நீரை சேமித்து நிலத்தடி நீர் உயர புதிய தடுப்பணைகளை கட்ட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான கோரிக்கை மனு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தடாகம் வட்டார விவசாயிகள் கூறினர்.