பழநி மாவட்டம் உருவாக்குவதன் பின்னணி என்ன? பி.ஏ.பி. , விவசாயிகள் எதிர்ப்பு

0
7

பொள்ளாச்சி; உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளை இணைத்து, பழநி மாவட்டம் உருவாக்கி, ஒட்டன்சத்திரத்துக்கு திருமூர்த்தி, அமராவதி அணை நீரை கொண்டு செல்லவே முயற்சி நடக்கிறது. அதனால், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு உடுமலை பகுதிகளை சேர்த்து மாவட்டம் உருவாக்க வேண்டும், என, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க துவங்கியுள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்த திருப்பூர் தனி மாவட்டமாக உருவான நிலையில், பொள்ளாச்சி மாவட்டம் அறிவிப்பு வெளியிட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், பழநி சப் – கலெக்டருக்கு அனுப்பியதாக சுற்றறிக்கை நகல், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், திண்டுக்கல் மாவட்டம், ஏழு சட்டசபை தொகுதியையும், திருப்பூர் மாவட்டம், எட்டு சட்டசபை தொகுதிகளையும் உள்ளடக்கிய பெரிய மாவட்டமாக உள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரம், பழநி ஆகிய சட்டசபை தொகுதிகளையும், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மடத்துக்குளம், உடுமலை ஆகிய இரு சட்டசபை தொகுதிகளையும் பிரித்து, பழநி மாவட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை சட்டசபை கூட்ட தொடரில் அறிவிக்க ஆவணம் செய்ய கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, பழநி மாவட்டம் பிரிப்பது தொடர்பான விரிவான அறிக்கையை வழங்க மாவட்ட கலெக்டர், சப் – கலெக்டருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பை கண்ட, பொள்ளாச்சி பி.ஏ.பி., விவசாயிகள், பொதுமக்கள், பா.ஜ.,வினர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி நகர பா.ஜ., தலைவர் பரமகுரு கூறுகையில், ”பழநி மாவட்டம் உருவாக்கவும், அதில், உடுமலை, மடத்துக்குளம் சேர்ப்பதாக அறிவிப்பு வெளியாகி வருவது கண்டிக்கிறோம்.

ஆழியாறு, பரம்பிக்குளம் அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல அமைச்சர் சக்கரபாணி முயற்சி எடுத்தார். இதற்கு கடும், எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களை இணைத்து பழநி மாவட்டம் உருவாக்கினால், திருமூர்த்தி, அமராவதி அணை நீரை ஒட்டன்சத்திரத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியாக, இந்த திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது.

இத்திட்டத்தை கைவிட்டு, பொள்ளாச்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும்.

 

இவ்வாறு, அவர் கூறினார்.

பி.ஏ.பி., விவசாயிகள் கூறுகையில், ‘பழநி மாவட்டம் உருவாக்கி, உடுமலை, மடத்துக்குளத்தை அங்கு இணைத்தால், பி.ஏ.பி., நீர் அப்பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சிகள் எடுப்பார்கள்.

பி.ஏ.பி., பாசனத்திலேயே நீர் பற்றாக்குறை உள்ள நிலையில், மாவட்டம் உருவாக்கி தண்ணீர் கொண்டு சென்றால் விவசாயம் பாதிக்கும்.

எனவே, பொள்ளாச்சியை தலைமையிடமாகக்கொண்டு உடுமலை, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாக்களை இணைத்து மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.