வெயிலால் உற்பத்தி குறைப்பு; காய்கறி, க றிக்கோழி விலை ஏறும்

0
7

மேட்டுப்பாளையம்; கடும் வெயிலால், விவசாயிகள் காய்கறிகள் உற்பத்தியை 30 சதவீதம் குறைத்துள்ளனர். கறிக்கோழி உற்பத்தி 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மேட்டுப்பாளையம், தொண்டாமுத்துார், அன்னுார், பொள்ளாச்சி, சூலுார், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் தென்னை, வாழை, காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

தற்போது கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே கடும் வெயில் வாட்டி வதைத்து வருவதால், கிராமப்புறங்களில் பல இடங்களில் நீர் ஆதரங்கள் வறண்டு வருகின்றன.

விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் விவசாயிகள் காய்கறிகளின் உற்பத்தியை 30 சதவீதம் வரை குறைத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் துணை தலைவர் பெரியசாமி கூறுகையில், ”கோடை காலம் முன்னெச்சரிக்கையாக காய்கறிகள் உற்பத்தியை விவசாயிகள் 30 முதல் 50 சதவீதம் வரை குறைத்துள்ளனர். தற்போதே தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இக்காலகட்டத்தில் என்ன தான் விவசாயம் செய்தாலும் அதிக மகசூல் கிடைக்காது. விவசாயிகள் அதிகம் நஷ்டம் அடைவார்கள்.

வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறையும் போது கோவையில் காய்கறிகள் விலை ஏறும் நிலை உள்ளது,” என்றார். கோவை மாவட்டத்தில் சுமார் 2,000 கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்களிடம் இருந்து தரப்படும் கோழிக் குஞ்சுகளை வளர்த்து வருகின்றனர்.

தற்போது நிலவி வரும் வெயில் காரணமாக கோழிகளின் இறப்பு சதவீதம் அதிகரிக்கும் என்பதால், உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தனியார் கறிக்கோழி பண்ணை விற்பனை உரிமையாளர் ரஜேஷ் கூறுகையில், ”வெயில் காலத்தில் 10 முதல் 12 சதவீதம் வரை இறப்பு ஏற்படும். இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கையாக சுமார் 10 சதவீதம் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்திற்கு 50 லட்சம் கிலோ கறிக்கோழி விற்பனை ஆகும். கோடை காலத்தில் விற்பனை பாதியாக குறையும், விலையும் அதிகரிக்கும்” என்றார்.