நுாறு நாள் வேலை தொழிலாளர்களுக்கு இழுத்தடிப்பு; ஏமாற்றம்! 4 மாதமாக கூலி வரலீன்னு புகார்…

0
8

பெ.நா.பாளையம்: கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிமொழி திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக கூலி வழங்கப்படவில்லை.

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதிமொழி திட்டத்தில் பணியாற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் கூலி வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்படுவதால், அவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தமிழகத்தில் முதல் கட்டமாக, 2006 முதல் படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

ஒவ்வொரு நிதி ஆண்டிலும், ஊரகப் பகுதிகளில் திறன் சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, 18 வயதுக்கு மேற்பட்டோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், 100 நாட்களுக்கு குறையாமல் வேலை வாய்ப்பினை அளிப்பதன் வாயிலாக, நிர்ணயிக்கப்பட்ட தரமான மற்றும் நிலையான சொத்துக்களை உருவாக்குதல் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்தில் ஆண், பெண் இரு நபர்களுக்கும், சம அளவிலான ஊதியம் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை, அசோகபுரம், குருடம்பாளையம், பிளிச்சி, நாயக்கன்பாளையம், ஆகிய ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு சரியான கால இடைவெளியில் கூலித்தொகை வழங்கப்படாததால், பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இது குறித்து விவசாய கூலி தொழிலாளர்கள் கூறுகையில், ”இத்திட்டத்தில், 15 நாட்களுக்குள் ஊதிய தொகை வழங்குதல் உறுதி செய்யப்பட வேண்டும் என விதி இருந்தும், இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்துக்கு ஒருமுறை தொகை வழங்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் எங்களுக்கு கூலி வழங்கப்பட்டதோடு சரி கடந்த நான்கு மாதங்களாக கூலி வழங்கப்படவில்லை. கூலித்தொகையை அரசு நிர்ணயம் செய்த விதிப்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ”மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு இத்தொகை வழங்கப்பட்ட பின்னர், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரித்து வழங்கப்படுகிறது. பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் கொண்டு சேர்க்கப்படுகிறது.

தொழிலாளர்கள் வேலை செய்கின்ற கூலி தொகை உரிய முறையில் கணக்கிட்டு, உடனுக்குடன் அனுப்பிவிடுகிறோம். பணம் வழங்கப்படுவதில் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்” என்றனர்.