கோவை: கேரள மாநிலத்தில், மனித வனவிலங்கு மோதல் பிரச்னைகளை எதிர்கொள்ள, ஐந்தாண்டுத் திட்டத்தை வேளாண் துறை தயாரித்து, அரசுக்கு பரிந்துரை செய்கிறது. தமிழகத்திலும் வேளாண் துறையும் வனத் துறையும் இணைந்து, இதுபோன்ற திட்டத்தை வகுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள அரசு ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. 2022-27 வரையிலான காலகட்டத்துக்கு, 14வது ஐந்தாண்டுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட கருத்துருவில், மனித வனவிலங்கு மோதல்களைத் தவிர்க்க செய்ய வேண்டியவை குறித்து விளக்கப்பட்டுள்ளது.
கேரள வேளாண் துறை 79 பக்கத்துக்கு, இந்த ஆய்வறிக்கையைத் தயார் செய்துள்ளது. மனித வனவிலங்கு முரண்பாடுகளை எதிர்கொள்ளத் தேவையான, மனித வளம் மற்றும் நிதித் தேவைகள் என்னென்ன, இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பு குறித்து விளக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உள்ளூர்வாசிகளின் பங்களிப்பை பயன்படுத்துதல், கேரளாவின் அனைத்து வனக்கோட்டத்திலும் குறிப்பாக, வடக்கு மண்டலத்தில் மனித வனவிலங்கு மோதல் அதிகமாக இருக்கிறது; ஆனால், தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள், பாதி அளவே பயனளித்திருக்கின்றன என, பல்வேறு கோணங்களில் இந்த ஐந்தாண்டு திட்ட அறிக்கை அமைந்துள்ளது.
மாற்றுப் பயிர் சாகுபடி, வன விலங்குகள், மனித குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்துக்குள் வருவதைத் தவிர்க்க, வேலிகள்/தடுப்புகள் அமைக்க வேண்டும். அந்தத் தடுப்புகள் வனவிலங்குகளின் இயல்பான நடமாட்டத்தைத் தடுப்பதாக அமைந்து விடக்கூடாது என்றெல்லாம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஐந்தாண்டு திட்டம் தமிழகத்திலும் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட வேண்டும் என, சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:
தமிழகத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில், மனித வனவிலங்கு மோதல்கள் அதிகம். குறிப்பாக கோவையில் காட்டு யானை, காட்டுப் பன்றி போன்றவற்றால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, இங்கு வனத்துறை, வேளாண் துறை இணைந்து மனித வனவிலங்கு மோதல்களைத் தவிர்க்க, தொலைநோக்குடன் கூடிய ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
இது பொதுவெளியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, விவசாயிகள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்துகளும் கேட்கப்பட வேண்டும். அப்போதுதான், இருதரப்புக்கும் பயனுள்ள தீர்வுகள் கிடைக்கும். இதுதொடர்பாக, தமிழக அரசு உரிய முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தன