வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் பொதுமக்கள் ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.இந்த கால்நடைகளை முறைப்படி பட்டிகளில் அடைத்து வைத்து பாதுகாப்பாக வளர்ப்பதில்லை. பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிவதற்கு விட்டு விடுகின்றனர். இதனால் வாகன விபத்துகள் ஏற்படுவதோடு, இந்த கால்நடைகளை பிடித்து தின்பதற்கு சிறுத்தைப்புலிகளும் ஊருக்குள் நுழைந்து விடுகின்றன. இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. குறிப்பாக அன்றாடம் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- வால்பாறையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களில் இந்த விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகன விபத்துகள் அதிகளவில் ஏற்பட்டுவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வால்பாறை நகர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்த போது ஒரு ஆடு குறுக்கே வந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரது கை எலும்பு முறிந்தது. இதனை தொடர்ந்து அவர், கால்நடைகளால் விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தனது கையில் கட்டுப்போட்ட நிலையில் நகராட்சி துப்புரவு அதிகாரியிடம் நேரில் புகார் கொடுத்தார்.
அதே போல கடந்த சிலநாட்களுக்கு முன்பு உடுமலைபேட்டை பகுதியிலிருந்து வால்பாறைக்கு குடும்பத்துடன் காரில் சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் வால்பாறையிலிருந்து சோலையார்அணைக்கு சென்ற போது உருளிக்கல் பெரியார்நகர் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்த போது குறுக்கே கன்றுக்குட்டி ஒன்று வந்துள்ளது. அதன் மீது கார் மோதிவிடாமல் இருப்பதற்காக டிரைவர் உடனே பிரேக் பிடித்துள் ளார்.
ஆனால் கார் நிற்காமல் கன்றுகுட்டியின் மீது மோதியது. இதில் கன்று குட்டி சம்பவயிடத்திலேயே பலியானது. மேலும் சாலை ஓரத்தில் நின்றிருந்த மற்றொரு காரின் மீதும், அந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த காரில் இருந்த பிரேம்குமார் என்பவரும் காயமடைந்தார்.
சுற்றுலா காரில் பயணம் செய்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதே போல கடந்த வாரத்தில் கேரளாவில் இருந்து வந்தவர்களின் இருசக்கர வாகனத்தின் குறுக்கே ஒரு ஆடு புகுந்ததால், இரு சக்கர வாகனத்தில் இருந்தவர் 2 பேர் விழுந்து படுகாயமடைந்தனர்.
இவ்வாறு வால்பாறை நகர்பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளிலும் சாலைகளில் இரவு நேரங்களில் ஆடு, மாடு, எருமைகள் படுத்திருக்கும் போது வாகனங்கள் மோதி கால்நடைகளும் இறக்க நேரிடுகிறது. வால்பாறை நகர் பகுதி எஸ்டேட் பகுதிகளில் உள்ள பயணிகள் நிழற்குடைகளுக்குள்ளும் இரவு நேரங்களில் கால்நடைகள் படுத்துக் கொண்டு அசுத்தம் செய்து விடுகின்றன. இதனால் பயணிகள் நிழற்குடைகளுக்குள் நிற்கமுடியாமல் அவதிப்படுகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை வருவாய்த்துறையின் தண்டல்காரர்கள் பிடித்து தொண்டு பட்டிகளில் அடைத்து வைத்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பார்கள். அதன் பின்னர் தான் கால்நடைகளை உரியவர்களிடம் கொடுப்பார்கள். ஆனால் தற்போது இந்த முறையில்லை.எனவே தற்போது நகராட்சி நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. ஆகவே பெரும் விபத்துகள் ஏற்படும் முன் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுப்பதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.