இமாச்சல் பிரதேசம், சொலான் மாநகராட்சி மேயர், கமிஷனர் மற்றும் 16 கவுன்சிலர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர், இரு நாள் பயணமாக, கோவை மாநகராட்சியில் செயல்படுத்தும் திட்டங்களை அறிந்துகொள்ள வந்துள்ளனர்.
கோவை மாநகராட்சி பகுதியில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தில், 50 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது, வேறெந்த மாநிலத்திலும், நகரத்திலும் செயல்படுத்தப்படவில்லை. இத்திட்டத்தை மற்ற நகரங்களில் செயல்படுத்துவதற்காக, வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கோவைக்கு வருகை தருகின்றனர்.
இதேபோல், தமிழகத்தில் மற்ற உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்த, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில், கோவையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும், பில்லுார்-3வது திட்டம், குடிநீர் எடுக்கப்படும் இடம், சுத்திகரிப்பு நிலையம், சுரங்கப்பாதை, சேரன் நகரில் குடிநீர் வினியோக நடைமுறை மற்றும், 24 மணி நேர குடிநீர் திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டனர்.
இமாச்சல் பிரதேசம் சொலான் மாநகராட்சியில் இருந்து மேயர் உஷா சர்மா, கமிஷனர் ஏக்தா ஹப்தா மற்றும், 16 கவுன்சிலர்கள் உட்பட, 20 பேர் கொண்ட குழுவினர் நேற்று கோவை வந்தனர்.
குடிநீர் வினியோகம் தொடர்பாக நிர்வாக பொறியாளர் இளங்கோவன், உதவி நிர்வாக பொறியாள் எழில், குப்பை மேலாண்மை குறித்து உதவி நகர் நல அலுவலர் பூபதி, பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக உதவி நிர்வாக பொறியாளர் கனகராஜ் ஆகியோர் விளக்கினர்.
பின், ஏ.கே.எஸ்., நகரில், 24 மணி நேரமும் குடிநீர் வினியோகிப்பது தொடர்பாக, உதவி பொறியாளர் சத்தியமூர்த்தி விளக்கினார்.