மாநில நெடுஞ் சாலைத் துறையின் அலட்சியப் போக்கு; அரசு பாலிடெக்னிக் கல்லுாரியின் மைதானம் ‘ போச்’; குன்று போல் கொட்டியுள்ள மண் குவியலால் அவதி

0
8

கோவை; கோவை – அவிநாசி ரோடு மேம்பாலப் பணிக்கு தோண்டிய மண்ணை எடுத்து, பாலிடெக்னிக் கல்லுாரி மைதானத்துக்குள் மலைக்குன்று போல், குவியல் குவியலாக கொட்டி வைத்துள்ளதால், பயிற்சி எடுக்க முடியாமல், விளையாட்டு வீரர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கோவை – அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அருகே ஏறுதளம் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் அணுகுசாலை அமைப்பதற்காக, கல்லுாரியின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு இருக்கிறது.

மேம்பாலத்துக்கு துாண்கள் துளையிட தோண்டியபோது எடுத்த மண்ணை, கல்லுாரியின் மைதானத்தில் மலைக்குன்று போல் கொட்டியுள்ளனர்.

அருகாமையில் ஜல்லிக்கற்கள் பரப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, விளையாட்டு வீரர்கள் மைதானத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவ – மாணவியருக்கான விளையாட்டு போட்டி நடந்தது; மைதானத்தில் குவியல் குவியலாக மண் கொட்டப்பட்டு இருந்ததால், வேறு வழியின்றி, நேரு ஸ்டேடியத்தில் போட்டி நடத்தப்பட்டுள்ளது.

தற்போது மைதானத்தின் பரப்பும் சுருங்கியிருக்கிறது. அரசு பாலிடெக்னிக் கல்லுாரி தரப்பில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், மண் குவியலை இன்னும் அகற்றாமல் இருக்கின்றன.

அதனால், கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள், விளையாட்டு பயிற்சி எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இதுதொடர்பாக, கல்லுாரி தரப்பில் விசாரித்தபோது, ‘மைதானத்தை சீரமைத்து தர, நெடுஞ்சாலைத்துறையினரிடம் கோரியுள்ளோம். சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, பாலம் வேலைக்கு தேவையான இடம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

மைதானத்தின் ரேக்கை சற்றுத்தள்ளி அமைக்க வேண்டும். பொதுப்பணித்துறை மதிப்பீடு தயாரித்துள்ளது.

மேம்பால வேலை இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. அதன்பின், சுற்றுச்சுவருடன் மைதானத்தை சீரமைத்து தருவதாக கூறியுள்ளனர்’ என்றனர்.

மாநில நெடுஞ்சாலைத்துறை (சிறப்பு திட்டங்கள்) அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘அவ்வளவு மண் குவிந்திருக்க வாய்ப்பில்லையே. மைதானத்தில் மண் இருந்தால், ஒப்பந்ததாரர்களிடம் கூறி, உடனடியாக அகற்றச் சொல்கிறோம். மைதானத்தை சீரமைத்து தருவதாக, நாங்கள் சொல்லவில்லை. சுற்றுச்சுவர் கட்டுவதற்கான தொகையை, கல்லுாரியின் வங்கி கணக்கில் செலுத்த உள்ளோம். அதற்கான கணக்கு எண் கோரியுள்ளோம்’ என்றனர்.