தேர்வு பணிக்கு ஆசிரியர்கள் அலைக்கழிப்பு: உயிரை கையில் பிடித்து வாகனங்களில் பயணம்

0
7

பொதுத் தேர்வு துவங்கியுள்ள நிலையில், அருகே இருக்கும் தேர்வு மையங்களுக்கு அனுமதிக்காமல், பல கி.மீ., தொலைவுக்கு, வேண்டுமென்றே அலைக்கழிக்கப்படுவதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத் தேர்வு நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தில், 128 மையங்களில், 34 ஆயிரத்து, 958 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தனித்தேர்வர்கள், 615 பேர்.

தேர்வுப் பணியில், 14 வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலர்கள், 128 முதன்மை கண்காணிப்பாளர்கள், 128 துறை அலுவலர்கள், 37 வழித்தட அலுவலர்கள், 290 பறக்கும் படை, நிலையான படை மற்றும், 2,150 அறைக்கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாற்றுத்திறன் மாணவர்களுக்காக, 310 ‘ஸ்கிரைப்’கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே, கோவை மாவட்டத்தில் தேர்வு பணிகள் தாமதமாக நடந்து வருவதாக, ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். காத்திருப்பு போராட்டம் நடத்தியதையடுத்து, அறை கண்காணிப்பாளர் பட்டியல், தேர்வுக்கு இரு நாட்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக, கோவை வருவாய் மாவட்ட தலைவர் முகமது காஜா முகைதீன் கூறியதாவது:

பிளஸ்2 பொதுத் தேர்வு பணியில், 75 சதவீதம் பெண் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில், 200 பேர் வரை, 30 கி.மீ., தொலைவில் உள்ள, தேர்வு மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ‘ஸ்கிரைப்’ பணிக்கு, பொள்ளாச்சி மையத்துக்கு காரமடையில் இருந்து ஒருவர் செல்கிறார்.

வாகனம் ஓட்டத்தெரிந்தவர்கள் உயிரை கையில் பிடித்து காலை, 8:45 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வருகின்றனர். முன்பு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில், 15 கி.மீ., துாரத்துக்குள் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர். தமிழகம் முழுவதும் இன்றும் இதே நடைமுறைதான்.

ஆனால், கோவையில் மட்டும்தான் குலுக்கல் முறையில் தேர்வு நடக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

பல தேர்வு மையங்களில் தொலைவில் இருந்து, தேர்வுப் பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு, பணி எதுவும் ஒதுக்கப்படாததால், மீண்டும் அவரவர் பள்ளிக்கு, திரும்ப வேண்டிய அவலநிலை இருந்தது. எனவே, கல்வி அதிகாரிகள் எங்கள் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

இதுதொடர்பாக தகவல் பெற, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளியை தொடர்பு கொண்டபோது, அவர் போன் அழைப்பை ஏற்கவில்லை.