கோவை : ஓட்டல்களில் இட்லி அவிக்க பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தப்படுவதாக தகவல் பரவியதால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கர்நாடகா மாநிலத்தின் சில உணவகங்களில், இட்லி வேக வைக்க பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தப்பட்டதாக, பெறப்பட்ட புகார் சர்ச்சையானது. தொடர்ந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அமைப்பு அனைத்து மாநில உணவு பாதுகாப்புத்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் படி, கோவையில் சில உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர். இத்துடன் பேக்கரிகள், டீக்கடை, கரும்பு ஜூஸ் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
ஏழு பேர் கொண்ட குழு அமைத்து, கோவை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த ஆய்வுகளை துவங்கியுள்ளோம். பேக்கரி, டீக்கடை, குளிர்பான கடைகள், சாலையோர கடைகள் அனைத்திலும் ஆய்வு செய்து வருகிறோம்.
கடந்த இரண்டு நாட்களில், கோவில்பாளையம், அன்னுார், குன்னத்துார், காந்திபுரம், வடவள்ளி, புலியகுளம், உக்கடம், சுந்தராபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 81 விற்பனையகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இதில், காலாவதியான 18 லிட்டர் குளிர்பானங்கள், பிஸ்கட் 26 பாக்கெட், அழுகிய பழங்கள் 12 கிலோ, டீத்துாள் கழிவு 7.5 கிலோ, பிரெட் 15 பாக்கெட் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
12 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி, 5000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில், மூன்று புகையிலை விற்பனை கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு, 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது; 7.265 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, மாநில அலுவலக உத்தரவின் படி, சில உணவகங்களில் பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தி இட்லி தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. பிளாஸ்டிக் தாள்கள் ஏதும் இல்லை; ஆனால், பரிமாறுவதற்காக வைக்கப்பட்ட வாழை இலை போன்ற பிளாஸ்டிக் தாள், 5 கிலோ பறிமுதல் செய்துள்ளோம். இட்லி வேக வைக்க, துணிகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. அவ்வாறு கண்டறியப்பட்டால் கடும் அபராதம் விதிப்பதோடு,
உணவகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.