யானை – மனித மோதல் தடுப்பது எப்படி? வன அதிகாரிகள் ஆய்வு

0
48

வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும் யானைகள் அதிகளவில் உள்ளன. சமீப காலமாக, யானை – மனித மோதலை கட்டுப்படுத்த வனத்துறையினர் மேற்கொண்டு வரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால், யானை – மனித மோதல் வெகுவாக குறைந்துள்ளது

இந்நிலையில், வால்பாறையில் யானை — மனித மோதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த வனத் துறை அதிகாரிகள் குழு, பான்குரா வடக்குப்பிரிவு டி.எப்.ஓ., தேபாசிஷ் மஹிமாபிரசாந்த், ஏ.டி.எப்.ஓ.,க்கள் சுபாசிஸ்கோஷ், பல்ராம்பச்சா, வனச்சரக அலுவலர்கள் சைகத்பிஸ்வாஸ், தபபிரதா ராய் ஆகியோர், வால்பாறைக்கு வந்தனர்.

வால்பாறையில் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் வேலி மற்றும் ஆரம்ப எச்சரிக்கை குறித்து குழுவினர் கேட்டறிந்தனர்.

வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர், மேற்கு வங்க அதிகாரிகளிடம் பேசியதாவது:

வால்பாறையில், யானை – மனித மோதலை தடுக்க, வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, மக்கள் வசிக்கும் பகுதிக்குள் யானைகள் வராமல் தடுக்க, கடந்த, 2023ல் ஸ்மார்ட் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில், அலாரத்துடன் கூடிய சிகப்பு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கி.மீ., தொலைவு வரை இந்த சிகப்பு விளக்கு தெரியும் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்கலாம்.

மேலும், யானைகள் நடமாட்டம் குறித்து கண்டறிய பல குழுக்களாக பிரிந்து, தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் செல்லாதவாறு கண்காணிக்கப்படுகிறது. மேலும், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகள் குறித்து, தினமும் மொபைல்போன் வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. வனத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ரேஷன் கடைகளை யானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருவதை தவிர்க்க, ‘கன்டெய்னர்’ கடைகளாக மாற்றும் பணி நடக்கிறது. பல்வேறு நடவடிக்கைகளால், மலைப்பகுதியில் யானை – மனித மோதல் படிப்படியாக குறைந்து வருகிறது.

இவ்வாறு, கூறினார்.

முன்னதாக, ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர், கோவை, மதுக்கரை ரயில்பாதையில் செயல்படுத்தப்பட்ட, செயற்கை நுண்ணறிவு கேமரா கண்காணிப்பு அமைப்பின், புதிய முயற்சி குறித்து விளக்கி கூறினார்.