கோவை, பிப். 27: கோவை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டுக்கான சொத்து வரி வசூல் ரூ.477.37 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த இலக்கு நடப்பு பிப்ரவரி மாதத்தில் ரூ.609.30 கோடி என உயர்த்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய மண்டலத்திற்கு ரூ.528.72 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு, இதில், ரூ.284.13 கோடி வசூலாகியுள்ளது. இன்னும் ரூ.244.59 கோடி பென்டிங் உள்ளது.
கிழக்கு மண்டலத்திற்கு ரூ.52.76 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.27.15 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.25.61 கோடி நிலுவை உள்ளது. மேற்கு மண்டலத்திற்கு ரூ.11.62 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு, 1.97 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.9.65 கோடி பாக்கி உள்ளது. வடக்கு மண்டலத்திற்கு ரூ.5.12 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.1.65 கோடி வசூலாகியுள்ளது. இன்னும் ரூ.3.47 கோடி நிலுவை உள்ளது.
தெற்கு மண்டலத்திற்கு ரூ.11.08 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், எதுவும் வசூலிக்கப்படவில்லை. ரூ.11.08 கோடி அப்படியே பென்டிங் உள்ளது. ஐந்து மண்டலத்திலும் சேர்த்து மொத்தமாக ரூ.314.90 கோடி வசூலாகியுள்ளது. இன்னும் ரூ.294.40 கோடி பென்டிங் உள்ளது.
இதை, வரும் மார்ச் 31ம் தேதிக்குள் வசூலித்து முடிக்க மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
அதனால், அந்தந்த பகுதி உதவி வருவாய் அலுவலர்கள், பில் கலெக்டர்கள் வரி வசூல் பணியில் தீவிரம் செலுத்தி வருகின்றனர்.