கோவை; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 18ம் தேதி வேலை நிறுத்தம் மேற்கொள்ள, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாக, அறைகூவல் விடப்பட்டுள்ளது.
நாட்டில், பல துணை தபால் நிலையங்களில் உள்ள பீட்களை, ஆங்காங்கே, ஒரே அலுவலகத்தில் இணைத்து மையப்படுத்தப்பட்ட பட்டுவாடா சேவையை (இன்டிபென்டன்ட் டெலிவரி சென்டர்) உருவாக்க, தபால் இலாகா முடிவு செய்துள்ளது. இது, தங்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் என, தபால்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இத்திட்டத்தை கைவிட வேண்டும்; அஞ்சல் ஆர்.எம்.எஸ்., அலுவலகங்களை மூடக்கூடாது; பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை தலைமை தபால் நிலையம் முன், சில நாட்களுக்கு முன், அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க, அஞ்சல் 3 மற்றும் அஞ்சல் 4 சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது.
நாளை (25ம் தேதி)சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன் தர்ணா நடத்தவும், மார்ச் 3ம் தேதி டில்லியில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 18ம் தேதி, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க, அஞ்சல் 4 சார்பாக, வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது.