அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் மூலம், உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

0
99

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா என முப்பெரும் விழா கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார்.

விழாவில், வேலைக்கு செல்லும் பெண்கள் 100 பேருக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டரையும், சமூக நலத்துறையின் மூலம் 50 பயனாளிகளுக்கு 2 பெண் குழந்தைகள் காப்பீட்டு திட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான வைப்புநிதி பத்திரங்களையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 64 ஆயிரத்து 500 மதிப்பில் பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலிகள், 26 பயனாளிகளும் ரூ.68 ஆயிரத்து 640 மதிப்பில் காதொலிக்கருவி, 5 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்்து ரூ.13 லட்சம் மதிப்பில் நிவாரண தொகை என மொத்தம் 202 பயனாளிகளுக்கு ரூ.77 லட்சத்து 33 ஆயிரத்து 140 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டம்
அத்துடன், ஜல்சக்தி அபியான் எனும் நீர் மேலாண்மை விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இந்திய நாடே வியக்கும் வகையில், ஏழை-எளிய மக்களின் நல்வாழ்விற்காக, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அவர் வழியில் செயல்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதில் பல்வேறு துறைகளிலும் வெற்றி கண்டு வருகிறார்.
கோவை மாவட்டத்துக்கு தனிக்கவனம் செலுத்தி 50 ஆண்டுகளில் இல்லாத வகையில், அனைவருக்கும் உறுதி செய்யப்பட்ட குடிநீர், சுற்றுச்சூழல் கட்டமைப்பு, மேம்பாலங்கள், விமான நிலைய விரிவாக்கம், கழிவுநீர் வடிகால் அமைப்புகள், பூங்காக்கள், மேம்படுத்தப்பட்ட ஊரக சாலைகள் என அடிப்படை கட்டமைப்புகள் அனைத்திலும் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது கையெழுத்திட்ட 5 திட்டங்களில் முதல் திட்டம்தான் ‘அம்மா இரு சக்கர வாகன திட்டம்’. இதன் மூலம் மாநிலத்தில் உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது. கோவை மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டிற்கு 4,949 உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் மூலம் ரூ.12.32 கோடி மானியத்துடன் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ஜெயலலிதாவால் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் பெண் கல்வியை மேம்படுத்துதல், பெண் சிசுக்கொலையை ஒழித்தல், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கை போக்குதல், சிறு குடும்பமுறையை ஊக்குவித்தல், பெண் குழந்தைகளின் மதிப்பை உயர்்த்துதல் ஆகும். இத்திட்டத்தில் வழங்கப்படும் உதவித்தொகை நிலை வைப்பு தொகையின் 20-ம் ஆண்டின் முடிவில் வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகை அந்த பெண் குழந்தைக்கு வழங்கப்படும்.
சமுதாயத்தில் மற்றவர்களுக்கு நிகராக மாற்றுத்திறனாளிகளும் சம பொருளாதார வாய்ப்பை பெற்று உயர வேண்டும் என்ற நோக்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அம்மன்.கே.அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை எ.சண்முகம், கஸ்தூரிவாசு, வி.பி.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், தமிழ்நாடு வாழ்வாதார திட்ட இயக்குனர் செல்வராசு, மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.